நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் இணைவதாக பக்காத்தான் ராக்யாட் அறிவித்தது

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் பக்காத்தான் ராக்யாட் பங்கு கொள்ளும்.

கோலாலம்பூரில் பக்கத்தான் தலைமைத்துவ மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அதனை அறிவித்தார்.

தேர்தல் சீர்திருத்தங்கள் மீது தான் கொண்டுள்ள கடப்பாட்டை அரசாங்கம் நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பளிக்க பக்காத்தான் கூட்டணி தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

என்றாலும் 9 பேர் கொண்ட அந்தக் குழுவில் இடம் பெறும் தனது மூன்று பேராளர்களுடைய பெயர்களை பக்காத்தான் இன்னும் அறிவிக்கவில்லை.

அந்தக் குழுவில் ஐந்து பிஎன் எம்பி-க்களும் சுயேச்சை உறுப்பினர்களில் ஒருவரும் அங்கம் பெற்றிருப்பர்.

“நாங்கள் பக்காத்தானைப் பிரதிநிதிப்பதற்கும் முக்கியம் எனக் கருதும் விஷயங்களை  எடுத்துரைக்கவும் ஒத்துழைக்கவும் குழுவின் பணிகளை பார்வையிடவும் அது தாமதப்படுத்தும் தந்திரமா என்பதை முடிவு செய்யவும் எங்கள் உறுப்பினர்களுக்கு முழு அதிகாரம் வழங்குகிறோம்.”

“நாங்கள் அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கிறோம். நாங்கள் ஆணவம் கொண்டவர்கள் அல்ல,” என்றார் அவர்.

அந்த நிருபர்கள் சந்திப்பில் டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங்கும் உடனிருந்தார்.

பக்காத்தான் முடிவு அது “இறுதி வரை செல்லத் தயாராக இருப்பதை” காட்டுவதாக அவர் சொன்னார்.

சீர்திருத்தங்களை தாமதப்படுத்தும் தந்திரமாக அது இருந்தால் நாங்கள் அதில் பங்கு கொள்ள மாட்டோம்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி கூடும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படும். அதில் அங்கம் பெறும் மூன்று எம்பி-க்களை பாஸ் கட்சி, டிஏபி, பிகேஆர் ஆகியவை முடிவு செய்யும்.

அந்தக் குழுவின் பரிந்துரைகள் அமலாக்கப்படுவதற்கு முன்னர் திடீர் தேர்தலை தாம் நடத்தப் போவதில்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உத்தரவாதம் அளித்தால் மட்டுமே தான் அந்தக் குழுவில் சேரப் போவதாக பக்காத்தான் ஏற்கனவே கூறியிருந்தது.

இது குறித்தும் நிருபர்கள் அன்வாரை வினவினர். அதற்குப் பதில் அளித்த அன்வார், அந்த விஷயத்தை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் உள்ள பக்காத்தான் உறுப்பினர்கள் எழுப்புவர் என்றார்.

ஒர் அமைச்சர் தலைமை தாங்கும் அந்தக் குழுவுக்கான தனது உறுப்பினர்களை பிஎன் தேர்வு செய்து விட்டது. ஆனால் இன்னும் பெயர்களை வெளியிடவில்லை.