‘தாண்டா புத்ரா(Tanda Putera) படத்தயாரிப்பாளர்கள் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை, ஏனென்றால் அப்படத்தில் லிம்மின் பாத்திரமே கிடையாது என்கிறார் அதன் இயக்குனர் சுஹாய்மி பாபா.
“அவர் அதில் சித்திரிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை.அதில் வரும் ஒரு பாத்திரம் அவர்தான் என்றும் சொல்லவே இல்லை.அவர் அப்படத்தில் இல்லை.அவ்வளவுதான்”, என்று செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் தெரிவித்தார்.
அப்படம் பற்றிய முகநூல்(Facebook) பக்கத்தில், லிம் தூக்கிச் செல்லப்படுவதைப்போன்ற படம் வெளியிடப்பட்டு அதற்கு, 1969 மே 13 கலவரத்தின்போது சிலாங்கூர் கொடிக்கம்பத்தில் சிறுநீர் கழித்ததற்காக லிம் பிடித்துச் செல்லப்படுவதாக விளக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது.
லிம், அக்கூற்றை மறுத்து கலவரங்களின்போது தாம் சாபாவில் இருந்ததாகக் கூறினார்.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் வலைமக்களிடமிருந்து நிறைய படங்களைப் பெற்றதாகவும் அவற்றைத்தான் முகநூல் வழி மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள் என்றும் சுஹாய்மி கூறினார்.
குறிப்பிட்ட படம் குறித்து புகார்களைப் பெற்றதும் அது நீக்கப்பட்டது என்றும் அவர் விளக்கினார்.
அந்தப் படம், திரைப்படம் சித்தரிக்கும் காலத்தில் எடுக்கப்பட்டதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்