‘மெர்தேக்காவுக்குப் பின்னர் முதன் முறையாக குற்றச் செயல்களை முறியடிப்பது முன்னுரிமை பெறுகின்றது’

அண்மைய காலம் வரையில் குற்றச் செயல்களை முறியடிப்பது அரசாங்கத்துக்கு ‘ஒரு தேவையாக பார்க்கப்படவில்லை’ என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார்.

1957ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து குற்றச் செயல்களைக் குறைக்கும் விஷயம் முன்னுரிமை பெறவில்லை என நிருபர்களிடம் அவர் சொன்னார்.

“இப்போது குற்றச் செயல்களை முறியடிப்பதற்கு உயர் நிலையிலிருந்து நாம் இப்போது அரசியல் உறுதிப்பாட்டை பெற்றுள்ளோம்,” என்றார் அவர்.

“மெர்தேக்கா கிடைத்தலிருந்து அது போன்று இருந்தது இல்லை. அது ஒரு தேவையாகப் பார்க்கப்படவில்லை.”

கடந்த காலத்தில் சமூகமும் கூட குற்றச் செயல்கள் மீது அதிகக் கவனம் செலுத்தியதில்லை என ஹிஷாமுடின் மேலும் கூறினார்.

“முன்பு குற்றச் செயல்கள் மீது இவ்வளவு அதிக கவனம் இருந்ததில்லை. ஆனால் பொது மக்கள் குற்றச்செயல்களை முறியடிப்பதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் எனக் கருதினால்  பிரதமர்  வரையில் அனைத்து நிலையிலான தலைமைத்துவமும் அந்தக் கவலையை ஒதுக்க் முடியாது,” என்றார் ஹிஷாமுடின்.

அதனால் போலீஸ்-மக்கள் விகிதாச்சாரத்தை அதிகரிக்கும் பொருட்டு ஆட்களைச் சேர்ப்பதை போலீஸ் படை அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

“ஆனால் பயிற்சி கொடுப்பதற்கு சில காலம் பிடிக்கும். ஆகவே இடைப்பட்ட நேரத்திற்கு எங்களால் முடிந்த எல்லா வழிகளையும் கையாண்டு வருகிறோம்,” என்றும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

அதில் பயிற்சிகாக இராணுவ வசதிகளைப் பயன்படுத்துவதும் சமூக அமைப்புக்களுடைய உதவிகளை நாடுவதும் அவற்றுள் அடங்கும்.

‘நமக்கு இன்னும் போலீஸ் சிறப்புப் பிரிவு தேவை’

என்றாலும் சிறப்புப் பிரிவு அதிகாரிகளை கிரிமினல் புலனாய்வுகளுக்கு பெரும் எண்ணிக்கையில் மாற்ற வேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல.

“போலீஸ் பணிகள் பல வகையானவை. அவற்றுள் வேவுத் தகவல்களைத் திரட்டுவதும் அடங்கும். அதற்குச் சிறப்புப் பிரிவு தேவை.”

வேவுப் பணி மிக முக்கியமான அம்சமாகும். ஆனால் அது தனித்து இயங்க முடியாது,” என அவர் சொன்னார்.

மற்ற நடவடிக்கைகளில் குற்றங்களை தடுக்கும் முயற்சிகள் சம்பந்தப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு உதவுவதற்காக முன்னாள் போலீஸ் படைத் தலைவர் அயூப் யாக்கோப்பை புக்கிட் அமானுக்கு கொண்டு வருவதும் அடங்கும் என்றும் ஹிஷாமுடின் தெரிவித்தார்.

நோன்புப் பெரு நாள் விடுமுறைக்கு பின்னர் My Distress SMS விழிப்பு முறை, NUR Alert (தேசிய அவசர நடவடிக்கை விழிப்பு முறை) ராக்கான் காப் (Rakan Cop) போன்ற மற்ற முயற்சிகளின் அடைவு நிலையைத் தாம் மறு ஆய்வு செய்யப் போவதாக அவர் மேலும் கூறினார்.

“அவை வெற்றி அளித்திருந்தால் நாடு முழுவதுக்கும் அவை விரிவு செய்யப்படும். இல்லையென்றால் அவற்றை மேம்படுத்தும் வழிகளை ஆராய்வோம்,” என்றார் உள்துறை அமைச்சர்.

குடியிருப்பாளர்கள் தாங்கள் இல்லாத நேரம் குறித்து உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குத் தகவல் கொடுப்பதை ஊக்குவிக்கும் “பாதுகாப்பான இல்லம்” என்னும் திட்டத்துக்காக 2,000 பாரங்களையும் அவர் சிலாங்கூர் கெளானா ஜெயாவில் விநியோகம் செய்தார்.

எல்லாத் தகவல்களும் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படுவதற்காக புள்ளிவிவரக் களஞ்சியம் ஒன்றில் சேர்க்கப்படும். குற்றச் சம்பவங்கள் மீது உறுதி செய்யப்பட்ட தகவல்களை பரப்புவதற்கும் அவை பயன்படுத்தப்படும்.

“சமூக ஊடகங்களில் கண் சிமிட்டும் நேரத்தில் தகவல்கள் பரவுகின்றன. அவற்றில் சில பொய்யாகவும் இருக்கலாம்,” என்றும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.

 

TAGS: