முன்னாள் தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் மீதான மலேசியா டுடே இணையத்தள வலைப்பதிவு அடிப்படைக் கட்டுரைகள் தொடர்பில் வழக்குரைஞர் எம் புரவலன் தி நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்/ நியூ சண்டே டைம்ஸ் ஏடுகளுக்கு இரண்டு கோரிக்கை நோட்டீஸுகளை அனுப்பியுள்ளார்.
அந்த ஏடுகள் மட்டுமல்ல. இன்னொரு மலாய் நாளேட்டுக்கும் நோன்புப் பெருநாளுக்கு பின்னர் நோட்டீஸ் அனுப்புமாறு தாம் தமது வழக்குரைஞரைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் புரவலன் சொன்னார்.
“நான் நோன்புப் பெருநாள் கொண்டாட்ட உணர்வுகளை பாழாக்க விரும்பவில்லை. பெருநாளைக்குப் பின்னர் அந்த நோட்டீஸ் அனுப்பப்படும்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“Lawyer keeps mum on Suaram funding” ( சுவாராம் நிதியளிப்பு மீது வழக்குரைஞர் மௌனம் காக்கிறார்), “Raja Petra’s expose to be investigated” (ராஜா பெத்ரா அம்பலப்படுத்திய விஷயங்கள் விசாரிக்கப்படும்) என்னும் தலைப்புக்களைக் கொண்ட கட்டுரைகளுக்காக வாசீர் அக்பர் மஜிட் அண்ட் கோ சட்ட நிறுவனம் வழியாக ஆகஸ்ட் 14ம் தேதி அந்தக் கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அந்த கட்டுரை பொய்யானவை, தீய நோக்கம் கொண்டவை, அதனால் அது மீட்டுக் கொள்ளப்படுவதோடு மன்னிப்பும் கேட்டுக் கொள்ளப்பட வேண்டும் என புரவலன் அந்த கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார்.
பாலசுப்ரமணியம் விவகாரத்தில் பங்காற்றியதாக புரவலன் மீதும் சுபாங் எம்பி ஆர் சிவராசா மீது மலேசியா டுடே வலைப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
ஆர்பிகே-யின் குற்றச்சாட்டுக்களை மறுத்த சிவராசா அவை “தீய கற்பனைகள்” என ஏற்கனவே வருணித்துள்ளார்.
பாலசுப்ரமணியம் செய்த முதலாவது சத்தியப் பிரமாணம் மீது நிருபர்கள் சந்திப்பில் என்ன சொல்ல வேண்டும் என்பதில் தாம் பாலசுப்ரமணியத்துக்கு பயிற்சி கொடுத்ததாக ஆர்பிகே கூறுவது “உண்மையையும் கற்பனையையும் கலந்து வழக்கமாக அவர் திரிக்கும் கதை” எனச் சிவராசா சொன்னார்.
தாம் பெரிமெக்கார் சென் பெர்ஹாட்டில் வேலை செய்ததாக ஆர்பிகே-யின் வலைப்பதிவுகளில் கூறப்பட்டுள்ளதை பாலசுப்ரமணியமும் மறுத்துள்ளார்.