30 ஆண்டு கால பிரிக்பீல்ட்ஸ் மாவட்டப் போலீஸ் நிலையம் கைவிடப்படுவதற்கு வழி வகுத்த நிலப் பேரத்தை கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் விளக்க வேண்டும் என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.
போலீஸ் நிலையமும் போலீஸ்காரர்களின் வீடுகளும் அமைந்திருந்த அந்த நிலம் அம்னோ செனட்டர் ஒருவருடன் தொடர்புடைய மேம்பாட்டாளர் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளதே தாம் கோரிக்கை விடுப்பதற்கான காரணம் என்றார் அவர்.
“அமைச்சர் நிலப் பரிவர்த்தனை ஏற்பாட்டை துல்லிதமாக வெளியிட வேண்டும்,” என நுருல் அந்த பழைய பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் நிலையம் இருந்த இடத்தில் நிருபர்களிடம் கூறினார்.
” PT 20 (Lot 18) Seksyen 94A Bandar Kuala Lumpur (BKL) என்ற நிலப்பட்டாவைக் கொண்ட அந்த நிலத்துக்கு மார்ச் 2ல் கூட்டரசுப் பிரதேச நில ஆணையர் உரிமையாளராக இருந்தார். ஆனால் அது காலப் போக்கில் Primamuda Holdings Sdn Bhd என்னும் தனியார் நிறுவனத்துக்கு மாற்றி விடப்படும்.”
அந்த நிலம் புதிய ஜாலான் டிராவர்ஸ் போலீஸ் நிலையத்தைக் கட்டுவதற்கும் மாவட்ட போலீஸ் நிலையத்தை புதிய இடத்தில் நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் ஈடாக பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுவதற்கு அந்த ஏற்பாடு வகை செய்தது என்றார் நுருல்.
அந்த Primamuda Holdings Sdn Bhdல் அம்னோ செனட்டருமான மரியானி முகமட் ஒர் இயக்குநரும் ஆவார். மரியானி புக்கிட் பிந்தாங் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவியும் ஆவார். அவர் ஒரு காலத்தில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்துக்கான ஆலோசனை வாரியத்தில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
அந்த நிலப் பேரம் சட்டப்பூர்வமானது என்று மரியானி வலியுறுத்தியுள்ளார்.