ஜோகூர் மந்திரி புசாராக அப்துல் கனி-க்குப் பதில் காலித் நோர்டின்!

வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடப்பு ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மானுக்குப் பதில் புதியவர் நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் வலுவடைந்து வருகின்றன. அதனால் அந்த மாநில பிஎன் இன்னொரு சுற்று உட்பூசலில் மூழ்கும் வாய்ப்புக்கள் கூடியுள்ளன.

1995ம் ஆண்டு முதல் மந்திரி புசாராக இருந்து வருகின்ற அப்துல் கனி, கடந்த இரண்டு தேர்தல்களுக்குப் பின்னர் விரும்பப்படாத மனிதராகக் கருதப்பட்டார். ஆனால் சுல்தான் தலையீடு, அரசியல் அம்சங்கள் காரணமாக அவர் மந்திரி புசார் பொறுப்பில் நிலைத்திருந்தார்.

அந்தப் பதவியை உயர் கல்வி அமைச்சர் முகமட் காலித் நோர்டினுக்கு விட்டுக் கொடுக்கும் பொருட்டு,  நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுமாறு அப்துல் கனி-யை பிஎன் கேட்டுக் கொள்ளக் கூடும் என்ற வதந்திகள் அண்மைய காலமாக ஜோகூர் அரசியல் வட்டாரங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

ஜோகூரில் அண்மையில் காலித் நோர்டின் நடத்திய நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் ஜோகூர் சுல்தான் எதிர்பாராத வகையில் கலந்து கொண்டது அந்த ஊகங்களுக்கு மேலும் வலுவூட்டியுள்ளது.

அந்த வருகை “அர்த்தமுள்ள சமிக்ஞை”  என உள்ளூர் சீன நாளேடுகளில் வருணிக்கப்பட்டுள்ளது.

சுல்தான் இப்ராஹிம், 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் தமது தந்தையார் சுல்தான் இஸ்காண்டார் இஸ்மமயில் காலமான பின்னர் அவரை அடுத்து  சுல்தானாக பொறுப்பேற்றுக் கொண்டார்.  காலஞ்சென்ற சுல்தான் இஸ்காண்டார் அப்துல் கனியுடன் நல்ல உறவுகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

ஜோகூர், கடந்த பல தசாப்தங்களாக பிஎன்/அம்னோ கோட்டையாக இருந்து வந்துள்ளது. என்றாலும் ஜோகூர்  அம்னோவுக்குள் பல பிரிவுகள் இயங்குவது ஊரறிந்த விஷயமாகும்.

துணைப் பிரதமர் முஹைடின் யாசினை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக தமது ஆதரவாளரை ஜோகூர் மந்திரி புசார் பொறுப்பில் வைத்திருக்க பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.

அப்துல் கனிக்குப் பதில் காலித் நோர்டினைத் தவிர்த்து சாத்தியமான சில பெயர்களும் அடிபடுகின்றன. அவர்களில் பூலாய் எம்பி நூர் ஜாஸ்லான் முகமட், தற்காப்புத் துணை அமைச்சர் அப்துல் லத்தீப் அகமட், பாசிர் ராஜா சட்ட மன்ற உறுப்பினர் அட்ஹாம் பாபா ஆகியோரும் அடங்குவர்.

ஆனால் முன்னாள் பினாங்கு முதலமைச்சர் கோ சூ கூனுக்கு நிகழ்ந்ததிலிருந்து பிஎன் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

பக்காத்தான் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது

ஜோகூர் அம்னோவுக்குள் உட்பூசல் மீண்டும் தொடங்கியிருப்பதை மாநில டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ் ஒப்புக் கொண்டார். கோ செய்த தவறு இங்கும் நடக்கலாம் என்றார் அவர்.

தமக்கு அடுத்து பொறுப்பேற்பதற்கு யாரையும் குறிப்பிடாமல் கோ நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிட முடிவு செய்தது பினாங்கு கெரக்கானில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

“அம்னோவுக்குள் உட்பூசல் ஏற்படும் சாத்தியம் உள்ளது. ஆனால் அதில் சதி ஏதும் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதை நாம் கூற முடியாது. ஏனெனில் அதிருப்தி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நமக்குத் தெரியாது”, என்றார் பூ.

அம்னோ உட்பூசல், மாநிலத்தை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றும் வாய்ப்புக்களை அதிகரிக்கும் என்பதை ஒப்புக் கொண்ட அவர், வெற்றியை உறுதி செய்ய நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

“2008 தேர்தலுக்குப் பின்னர் நமது தலைவர்களில் சிலருக்கு ஆணவம் பிடித்துள்ளதாகத் தோன்றுகிறது. நாம் கடினமாக உழைக்க வேண்டும். மாநிலத்தில் வெற்றி பெற பிஎன் பலவீனங்களை மட்டும் நம்பியிருக்கக் கூடாது.”

மந்திரி புசார் பதவிக்கு அம்னோ வேட்பாளர் யாராக இருந்தாலும் பக்காத்தான், பிஎன்-னுக்கு தொடர்ந்து சவால் விடுத்து வரும் என ஜோகூர் பாஸ் ஆணையாளர் மாஹ்போட்ஸ் முகமட் கூறினார்.

அப்துல் கனி-யிடமிருந்து காலித் நோர்டின் பொறுப்பேற்றாலும் அம்னோ பற்றிய தங்கள் எண்ணத்தை மக்கள் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றார்  அவர்.

“ஏனெனில் பிஎன் கொள்கைகள் தொடர்ந்து ஒரே மாதிரியாகவே இருக்கும்,” என அவர் சொன்னார்.

“அப்துல் கனி பல தவறுகளை செய்திருக்கலாம். அதனால் அவரை மாற்ற பிஎன் விரும்பக் கூடும். ஆனால் காலித்-தும் அம்னோவைச் சேர்ந்தவரே… எங்களைப் பொறுத்த வரையில் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்களே”, என மாஹ்போட்ஸ் குறிப்பிட்டார்.

TAGS: