‘தாசெக் சினியைக் காப்பாற்றுங்கள் இல்லை என்றால் எங்கள் வாக்குகள் இல்லை’ என ஒராங் அஸ்லி மக்கள் எச்சரிக்கை

நாட்டின் இரண்டாவது பெரிய இயற்கை ஏரியான தாசெக் சினியைக் காப்பாற்றுவதற்கு பாகாங் மாநில அரசாங்கம் முயற்சி செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் பிஎன்-னுக்கு எங்கள் வாக்குகள் கிடைக்காது என அந்த ஏரியைச் சுற்றிலும் வாழும் பூர்வகுடி மக்கள் மந்திரி புசார் அட்னான் யாக்கோப்பை எச்சரித்துள்ளனர்.

“நான் அட்னானை எதிர்கொண்டாலும் நான் அதனைச் சொல்வேன். என் மக்கள் ஆத்திரமாக இருக்கின்றனர்,” என கம்போங் குமும் தோக் பாத்தின் (கிராமத் தலைவர்) அவாங் அலோக் கூறினார்.

அந்த ஏரியைச் சுற்றிலும் வெட்டுமர நடவடிக்கைகளோ, சுரங்க நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை என அட்னான் கூறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி கம்போங் குமும் ஒராங் அஸ்லி நடவடிக்கைக் குழுத் தலைவருமான அவாங் கருத்துரைத்தார்.

ஆசிக் எப் எம் ஒலிபரப்பில் அட்னான் அவ்வாறு சொன்னதாக அவாங் கூறிக் கொண்டார்.

அந்த நடவடிக்கைகளைக் காண நேரில் ஒராங் அஸ்லி குடியிருப்புப் பகுதிக்கு வருமாறு நடவடிக்கைக் குழு அட்னானுக்கு அழைப்பு விடுத்தது.

அந்தப் பகுதியிலும் கம்போங் குமும் நிலத்திலும் வெட்டுமர சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது பற்றி கடந்த ஏப்ரல் 10ம் தேதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் சமர்பித்த ஒரு மகஜரில் அந்த சமூகம் விளக்கியிருந்தது.

“மருந்துகளைத் தயாரிப்பதற்கான வேர்களைத் தேடி நாங்கள் சுரங்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட காட்டுப் பகுதிக்குள் நுழைய முடியவில்லை. வெட்டுமர நடவடிக்கைகளினால் ரோத்தான், வேர்கள் போன்ற எங்கள் வாழ்வதாரங்களையும் நாங்கள் இழந்து விட்டோம்,” என அவர் சொன்னார்.

தேவான் நெகாராவில் உள்ள ஒராங் அஸ்லி பேராளரான செனட்டர் முகமட் ஒலியான் அப்துல்லா சொல்வது போல எந்த அரசியல் கட்சியின் செல்வாக்கிற்கும் நாங்கள் பலியாகவில்லை என அவாங் வலியுறுத்தினார்.

“நாங்கள் 55 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் இப்போது இல்லை. முன்பு நாங்கள் பூர்வ குடி மக்களுடைய உரிமைகள் மீதான ஐ நா பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது எங்கள் நிலத்தின் மீதான எங்கள் உரிமைகளை உணராமல் கண்மூடித் தனமாக கீழ்ப்படிந்து நடந்து கொண்டோம்,” என்றார் அவர்.

நஜிப்-பின் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் தாசெக் சினி அமைந்துள்ளது. அவர் அந்தத் தொகுதியில் கடந்த டேர்தலில் பிகேஆர் வேட்பாளருக்கு எதிராக மகத்தான 26,464 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

அந்தத் தொகுதியில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 77,663 ஆகும். அதில் தாசெக் சினியை சுற்றியுள்ள ஐந்து ஒராங் அஸ்லி கிராமங்களில் 130 வாக்காளர்கள் உள்ளனர்.