பெர்லிஸ் மந்திரி புசார் முகம்மட் ஈசா சாபு, 2002-இல் தாம் முனைவர் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம் மலேசிய தகுதி நிர்ணய அமைப்பின் (MQA) பட்டியலில் இடம்பெறாதது என்றாலும் அனைத்துலக அங்கீகாரம் பெற்றதுதான் என்கிறார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் நியுபோர்ட் பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கிய “டாக்டர்” பட்டம், MQAஇன் அங்கீகாரம் பெறாதது என்பதால் பொய்யானது என சில தரப்பினர் கூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
நேற்று, ஊடகங்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பெர்லிஸ் அம்னோ தொடர்புக்குழுத் தலைவருமான முகம்மட் ஈசா, பத்தாண்டுகளுப் பிறகு இவ்விவகாரத்தைக் கிளப்பி விட்டிருப்பது ஏன் என்பது தமக்குப் புரியவில்லை என்றார்.
“ மக்கள் டாக்டர் என்று என்னை அழைக்காவிட்டால் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால், நான் மருத்துவ டாக்டர் அல்ல. ஆனால், நான் படித்துத்தான் அனைத்துல அளவில் மதிக்கப்படும் முனைவர் பட்டம் பெற்றேன்-அதுதான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விசயம்” , என்று முகம்மட் ஈசா கூறினார்.
-பெர்னாமா