அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில், நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) அரசாங்கத்திடம் பெற்ற ரிம250மில்லியன் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டதற்குக் கருத்துரைக்க மறுத்துவிட்டார்.
“அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்”, என்றாரவர். பிகேஆர் ஃவியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, என்எப்சி திட்டத்தை மறுகுத்தகைக்கு விடும் திட்டம் இருப்பதால் அக்கடன் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது பற்றி எதிர்வினையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
ஷரிசாட்டின் கணவர் முகம்மட் சாலே இஸ்மாயிலுக்குச் சொந்தமான என்எப்சி, அதற்குக் கொடுக்கப்பட்ட கடனை ஆடம்பரச் சொத்துகள் வாங்குவதற்குச் செலவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் நோ ஒமார் அத்திட்டத்தை மறுகுத்தகைக்கு விட எண்ணியிருப்பதாக அறிவித்திருந்தார்.
மார்ச் 12-இல், சாலேமீது ரிம50மில்லியன் நம்பிக்கை மோசடிக் குற்றமும் நிறுவனச் சட்டத்தை மீறியதாக மேலும் இரு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
இச்சர்ச்சைகளின் காரணமாக ஷரிசாட்டின் செனட்டர் பதவியும் நீட்டிக்கப்படவில்லை, அதன் விளைவாக அவர் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் பதவியை விட்டும் துறக்க வேண்டியதாயிற்று.
என்எப்சி திட்டத்தை மறு-குத்தகைக்கு விடுவதற்குமுன், ரிம250மில்லியன் கடன் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்பது உள்பட, அந்த நிறுவனத்தின் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்று ரபிஸி கூறியுள்ளார்.
ஷரிசாட், தமக்கும் என்எப்சி ஊழலுக்கும் தொடர்புண்டு என்று கூறினார்கள் என்று ரபிஸிக்கும் பிகேஆர் மகளிர் தலைவர் ஜுரைடா கமருடினுக்கும் எதிராக அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். அவ்வழக்கு இப்போது விசாரணையில் உள்ளது.
ஷரிசாட், இன்றுகாலை தேசிய நலவளர்ச்சி அறநிறுவன அறங்காவல் வாரியத் தலைவர் என்ற முறையில் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.
அப்போது அவர், அம்மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் பெற்றுவரும் நோயாளிகளுக்கு ரிம1.06மில்லியன் நிதி உதவி அளிக்கப்படுவதாக அறிவித்தார்.