மொனோரயில் மீண்டும் நின்றுபோனது, 200பேர் சிக்கிக்கொண்டனர்

இம்பி நிலையத்திலிருந்து புக்கிட் பிந்தாங் சென்றுகொண்டிருந்த ஒரு ரயில்வண்டி நின்றுபோனதால் கோலாலம்பூர் மொனோரயில் சேவை ஒரு மணி நேரம் தடைப்பட்டது. நின்றுபோன ரயில்வண்டியில் 200பேர் சிக்கிக்கொண்டனர்.

 

அச்சம்பவம் காலை மணி 8.35க்கு நிகழ்ந்தது. 8.55-க்குப் பயணிகள் மற்ற ரயில்வண்டிகளுக்கு மாற்றப்பட்டனர் என்று கேஎல் ஸ்டார் ரெயில் பேச்சாளர் அஜா கஸாலி தெரிவித்ததாக பெர்னாமா கூறியது.

அச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்று கூறிய அவர், ரயில் வண்டியில் குளிர்சாதன வசதி, விளக்குகள் எல்லாம் நின்று போகாமல் ஒழுங்காகச் செயல்பட்டதாகக் குறிப்பிட்டார்.

சேவைகள் 30 நிமிடத்தில் தொடர்ந்ததாக அவர் சொன்னார். அச்சம்பவத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

“அச்சம்வத்துக்காக கேஎல் ஸ்டார் ரெயில் சார்பாக பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.

கடந்த ஐந்து நாள்களில் மொனோரயில் சேவை தடைப்பட்டது இது இரண்டாவது தடவையாகும்.

கடந்த சனிக்கிழமை மொனோரயில் ஒன்று பிரிக்பீல்ட்ஸ் சுவி டோர் அடுக்குமாடி வீடுகளுக்கு எதிர்ப்புறம் நின்றுபோனது.183 பயணிகள் அதில் சிக்கிக்கொண்டனர்.

அதில், குளிர்வசதி சாதனம் வேலை செய்யாமல் போனதைக் கண்ட சில பயணிகள் பதற்றமைடைந்து ரயிலின் கண்ணாடியை உடைத்தார்கள்.

அந்த ரயில் வண்டியிலிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மயக்கமுற்றதாகவும் உடைந்த கண்ணாடி துண்டுகள் குத்தியதால் இருவர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.