கெடா வீடமைப்புத் திட்டங்களுக்கு புத்ராஜெயா ரிம12.3மில்லியன் ஒதுக்கீடு

கூட்டரசு அரசாங்கம் கெடாவில் வீடமைப்புத் திட்டங்களுக்காக  இவ்வாண்டு ஜனவரிக்கும் மார்ச்சுக்குமிடையில் ரிம8மில்லியனைச் செலவிட்டிருக்கிறது.அதன் அமைப்புகளின்வழி இப்பணம் செலவிடப்பட்டிருக்கிறது.

கெடா வட்டார மேம்பாட்டு வாரியம்(கெடா), கியாட் மாரா ஆகியவையே அவ்வமைப்புகளாகும்.அவை புதிய வீடுகள் கட்டுவதிலும் பழைய வீடுகளைப் பழுதுபார்க்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

ஜனவரிக்கும் மார்சுக்குமிடையில் கெடா ரிம4,158,000செலவில் 378 வீடுகளைப் பழுதுபார்த்தும் ரிம3,040,000 செலவில் 76புதிய வீடுகளைக் கட்டியும் இருப்பதாக கெடாவில் உள்ள கூட்டரசு அரசாங்க மேம்பாட்டுத் துறை பெர்னாமாவுக்கு அனுப்பி வைத்த அறிக்கை கூறியது.

“கியாட் மாரா, 88வீடுகளைப் பழுதுபார்ப்பதற்கு ரிம968,000செலவிட்டிருந்தது”, என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

இதனிடையே கெடா தலைவர் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபா, 2009க்கும் 2011க்குமிடையில் அந்த அமைப்பு 1931 புதிய வீடுகளைக் கட்டியதுடன் 1,395 வீடுகளைப் பழுதுபார்த்தும் இருப்பதாகக் கூறினார்.

அப்பணிகளுக்காக மத்திய அரசு 2009க்கும் 2011க்குமிடையில் ரிம78மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியது என்றாரவர்.

பொதுமக்களிடமிருந்து கூடுதல் கோரிக்கைகள் வந்திருப்பதால் இவ்வாண்டு வீடமைப்புக்கான ஒதுக்கீடு ரிம12.3மில்லியனாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அஹ்மட் பாஷா தெரிவித்தார்.

“இதை வைத்து 206 புதிய வீடுகளக் கட்டவும் 378வீடுகளைப் பழுதுபார்க்கவும் முடியும்”.

வீடமைப்பு உதவி கோருவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடி வருவதாகவும் அவர் சொன்னார்.

-பெர்னாமா

 

 

TAGS: