சரவாக், எண்ணெய் உரிமப் பண மறு ஆய்வு பற்றி புத்ராஜெயாவுடன் விவாதிக்கும்

சரவாக்கிற்கு இப்போது பெட்ரோல் உரிமப் பணமாகக் கொடுக்கப்பட்டு வருகின்ற ஐந்து விழுக்காட்டை மறு ஆய்வு செய்வதற்கான தேவை குறித்து மாநில அரசாங்கம் கூட்டரசு அரசாங்கத்துடன் விவாதிக்கும்.

இரண்டு தரப்புக்கும் இடையில் நிலவும் அணுக்கமான உறவுகள், நல்லெண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த விவாதம் நடத்தப்படும் என முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் கூறினார்.

கிழக்குக் கரை மாநிலங்களுக்கான பெட்ரோலிய உரிமப் பண விவகாரத்தை ஆய்வு செய்ய சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அண்மையில் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து சரவாக்கிற்கு கொடுக்கப்படும் உரிமப் பணம் பற்றியும் விவாதிப்பது அவசியமாகியுள்ளதாக அவர் சொன்னார்.

“பிரதமருடன் எனக்கு உள்ள நல்ல உறவுகள் அடிப்படையில் அந்த விவகாரம் விவாதிக்கப்படும்,” என கூச்சிங்கில் போர்னியோ மாநாட்டு மண்டபத்தில் தாம் நடத்திய நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் நிருபர்களிடம் அப்துல் தாயிப் பேசினார்.

அந்தக் குழு ஆய்வை முடித்து கூட்டரசு அரசாங்கத்திடம் பரிந்துரைகளை வழங்குவதற்கு ஆறு மாத அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எண்ணெய் உரிமப்பண விவாகரம் தொடர்பான எல்லாப் பிரச்னைகளுக்கும்  பரிந்துரைகள் முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்குக் கரை மாநிலங்களுக்கான பெட்ரோலிய உரிமப் பண மறு ஆய்வில் சரவாக்கும் சபாவும் சேர்க்கப்பட வேண்டும் என பல சரவாக் மாநில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காரணம் தேசிய பெட்ரோலிய உற்பத்தியில் பெரும்பகுதியை அவ்விரு மாநிலங்களும் வழங்குகின்றன.

ஐந்து விழுக்காடு உரிமப் பண ஒப்பந்தம் நான்கு தசாப்தங்களுக்கு முன்பு செய்து கொள்ளப்பட்டதால் அதனை மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக சரவாக் பாரிசான் நேசனல் மகளிர் துணைத் தலைவி பாத்திமா அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

தீவகற்ப மாநிலங்களுக்கு இணையாக சபா, சரவாக் மாநிலங்களுடைய நிலையை உயர்த்துவது கூட்டரசு அரசாங்கத்தின் கடமை  என மாநில டிஏபி  தலைவர் வோங் ஹோ லெங்-கும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பெர்னாமா