லங்காட் 2 மீது அமைச்சு சிலாங்கூர் மாநிலச் செயலாளரைச் சந்திக்கும்

லங்காட் 2 என அழைக்கப்படும் லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையம் குறித்த பிரச்னையை சிலாங்கூர் மாநிலச் செயலாளருடன் விவாதிக்குமாறு எரிசக்தி, பசுமை தொழில் நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டார் சின் பா கூய், அமைச்சின் தலைமைச் செயலாளர் லூ துக் கீ-க்கு பணித்துள்ளார்.

அந்தத் திட்டத்தை அமலாக்குவது மீது இணக்கம் காணுமாறு அவர் மாநில அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

“அந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். ஏனெனில் அதனால் யாருக்கும் நன்மை இல்லை. தண்ணீர் விநியோகம் இல்லாத போது மக்கள் சிரமத்தை அனுபவிப்பர்,” என புத்ராஜெயாவில் இன்று நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட போது அவர் நிருபர்களிடம் கூறினார்.

2015ம் ஆண்டு முதல் கிள்ளான் பள்ளத்தாக்கில் போதுமான தொடர்ச்சியான தண்ணீர் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு இவ்வாண்டு கூட்டரசு அரசாங்கமும் மாநில அரசாங்கமும் இணக்கம் காண வேண்டும் என்றும் சின் சொன்னார்.

“தண்ணீர் கட்டணம் பற்றி விவாதிப்பதற்கு முன்னர் லங்காட் 2க்கு சிலாங்கூர் அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அந்த நிலையம் தயாரானதும் நாம் பேசலாம்,” என்றார் அவர்.

அந்த நிலையத்தைக் கட்டுவதற்கான நிதி கூட்டரசு அரசாங்கத்திடம் உள்ளது. ஆனால் மாநில அரசாங்கத்திடமிருந்து மேம்பாட்டு ஆணை கிடைக்காமல் இருப்பதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றில் நீர் விநியோகச் சேவைத் தொழில் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைகளை பரிசீலிக்க துணைப் பிரதமர் முஹைடின் யாசின் தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பெர்னாமா