பினாங்கு பத்து உபானில் 22 கிராமவாசிகள் அவர்களின் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்ற அறிவிக்கையை மேம்பாட்டு நிறுவனம் மீட்டுக்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் லிம் குவான் எங் உத்தரவிட்டுள்ளார்.
அவ்விவகாரம் பற்றி முதலில் கேள்விப்பட்டபோது தென் கொரியாவிலிருந்ததாகவும் மெர்டேகா நாளான ஆகஸ்ட் 31-க்குள் இடத்தைக் காலி செய்யுமாறு கிராமவாசிகள் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் லிம் கூறினார்.
மாநில பாஸ் கட்சியின் நில, மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் இஸ்ஸுரி இப்ராகிம் அனுப்பிய குறுஞ்செய்திவழி அதனை அறிந்துகொண்ட லிம், நாடு திரும்பியதும் கிராமவாசிகளைச் சந்திப்பாகக் கூறினார்.
“கேள்விப்பட்டதை என்னால் நம்பவே முடியவில்லை-என்ன மாதிரியான மனிதர் அவர்?இப்படிப்பட்ட செயலை எவரும் சகித்துக்கொண்டிருக்க மாட்டார்கள்”, என்று நேற்று பத்து உபான் குடியிருப்பாளர்களிடையே பேசியபோது லிம் குறிப்பிட்டார்.
“ஆகஸ்ட் 31க்குள் வீடுகளைக் காலி செய்யுமாறு குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மேம்பாட்டாளருக்கு மெர்டேகா உணர்வே இல்லை போலும்”, என்றாரவர்.
மேம்பாட்டாளர் கறுப்புப் பட்டியலிடப்படுவார்
மேம்பாட்டாளர் கிராமவாசிகளுக்கு அனுப்பிய அறிவிக்கையை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று அவரின் வழக்குரைஞருக்கு லிம் எச்சரிக்கை விடுத்தார். “இல்லையேல் அவரது பெயர் கறுப்புப்பட்டியலிடப்படும் அதன்பின் அவர் பினாங்கில் தொழில் செய்ய இயலாது”.
லிம்மின் கடுமையான உரை கேட்டு கிராமவாசிகள் ஆரவாரம் செய்தனர்.
மேம்பாட்டாளர் உத்தரவுக்குப் பணியாவிட்டால், கிராமவாசிகள் வெளியேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு பினாங்கு முனிசிபல் மன்றமும் நில அலுவலகமும் கேட்டுக்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் சொன்னார்.
மேம்பாட்டாளர், வழக்குரைஞர் மூலமாக அனுப்பி வைத்த கடிதத்தில் மேம்பாட்டு நிறுவனத்துக்கும் குடியிருப்பாளர்களுக்குமிடையில் மூன்றாண்டுகளுக்குமுன் தொடங்கிய பேச்சுகள் முடிந்து விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஜூலை 30இல், மேம்பாட்டாளர் வழங்க முன்வந்த இழப்பீட்டைக் குடியிருப்பாளர்களில் 22பேர் ஏற்க மறுத்ததால் ஆகஸ்ட் 31-க்குள் அவர்கள் தாங்கள் குடியிருக்கும் வீட்டைக் காலி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்றும் அக்கடிதம் குறிப்பிட்டது.
எழுத்துப்பூர்வமாக எதுவும் இல்லை
ஆனால்,பினாங்கு முனிசிபல் மன்ற உறுப்பினருமான இஸ்ஸுரி, இழப்பீடு தொடர்பான பேச்சுகள் இன்னும் முடிவுறவில்லை என்கிறார். அங்குள்ள 48 குடியிருப்பாளர்களில் 26பேர் மட்டுமே மேம்பாட்டாளர் கொடுக்க முன்வந்த இழப்பீடை ஏற்றுக்கொண்டார்கள்.
மீதமுள்ள 22 குடும்பங்களும் அங்கு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், தாங்கள் தற்காலிகமாக தங்கியிருக்க அதே பகுதியில் வீடும் தாங்கள் தங்கியிருந்த வீடுகளுக்குப் பதிலாக வீடு அல்லது 700சதுர அடியில் அடுக்குமாடி வீடும்தான் கேட்கிறார்கள் என்றாரவர்.
இதனிடையே மேம்பாட்டாளருக்கு அரசியல்வாதிகளின் பக்கபலம் இருப்பதால்தான் இப்படி நடந்துகொள்கிறார் என்று லிம் கூறினார்.
லிம் இப்படிக் கூறியதும், “யார் அவர்கள் என்று சொல்லுங்கள், பார்த்து விடுகிறோம்”, என்று கூட்டத்தினர் உரத்த குரலில் கூவினர்.
“அவர்கள் யார் என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்”, என்று மட்டுமே முதலமைச்சர் பதிலிறுத்தார்.
நிறுவனங்களுக்கு என்னதான் அரசியல் பக்கபலம் இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டும், மனிதாபிமானம் காட்ட வேண்டும் என்று லிம் மேலும் கூறினார்.