முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் ஒப்பிட்டுள்ளார்.இருவரும் பெரிய மாற்றங்கள் செய்யப்போவதாகச் சொன்னார்கள் ஆனால், செய்யவில்லை என்றாரவர்.
ஒபாமா(வலம்)வைப் போலவே அன்வாரும் தேர்தல் பரப்புரையில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.ஆனால், அவை நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அதனால், மக்கள் பிஎன்னையே ஆதரிக்க வேண்டும்.“தெரியாத தேவதையைவிடவும் நமக்குத் தெரிந்த சைத்தானே மேலானது”, என்று மகாதிர் தம் வலைப்பதிவான Che Det.காம் இல் எழுதியிருக்கிறார்.
“பிஎன் மக்கள் சொல்லுக்குச் செவிசாய்த்து பல சட்டங்களையும் கொள்கைகளையும் மாற்றியுள்ளது.எனவே, மக்கள் என்ன மாற்றங்களை விரும்புகிறார்களோ அவற்றைச் செய்யுமாறு பிஎன்னிடம் வலியுறுத்தினாலே போதுமானது”, என்றாரவர்.
மாற்றரசுக்கட்சியிடம் ஐந்தாண்டுகள் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்துப் பார்க்கலாம் என்ற சோதனை முயற்சி ஆபத்தானது.அக்காலக் கட்டத்தில் எவ்வளவோ சேதங்கள் நிகழலாம்.
“ஐந்தாண்டுகளில் பலவற்றையும் அழித்துவிட முடியும். மாற்றுத்தரப்புகளின் அரசாங்கம், பிஎன் திரும்பிவர வாய்ப்பே இல்லாமல் செய்துவிடும்.அரசாங்கத்தை மாற்ற நினைக்க எவரையும் அரசு அதிகாரிகளைக் கொண்டே மிரட்டுவார்கள்”, என்றவர் விவரித்தார்.
‘நாடு ஒட்டாண்டி ஆகிவிடும்’
பக்காத்தான், மலேசியாவை சமூக நல நாடாக்கி இலவச கல்வி, சாலைக்கட்டணம் ரத்து, பெட்ரோல் விலைக்குறைப்பு போன்றவற்றுடன் இன்னும் பல திட்டங்களையும் செயல்படுத்துவதன் மூலம் நாட்டை ஒட்டாண்டியாக்கிவிடும் என்று மகாதிர் குறிப்பிட்டார்.
நாட்டை மேம்படுத்தவும் உதவித்தொகை கொடுக்கவும் நிதி தேவை என்று விளக்கிய அவர், பக்காத்தான் வரிகளையும் சாலைக்கட்டணங்களையும் மற்ற கட்டணங்களையும் இரத்துச் செய்தால் நாட்டிடம் பணம் இருக்காது, கையிருப்பும் இருக்காது என்றார்.
அரசாங்கம் கடன் வாங்குவது தப்பில்லை.ஆனால், கடன் வாங்கிச் செய்யப்படும் முதலீடுகள் ஆதாயத்தைக் கொண்டு வர வேண்டும், ஆதாயமில்லாத வகையில் பணத்தைச் செலவிடுவதுதான் தப்பு என்றவர் குறிப்பிட்டார்.
அன்வாருக்குப் பிரதமராக வேண்டும் என்பதில்தான் குறி என்று குறைகூறிய மகாதிர், அவர் அரசாங்கப் பதவியில் இருந்தபோது எந்த மாற்றத்தையும் செய்ததில்லை என்றார்.
“மாற்றரசுக் கட்சித் தலைவர் என்ற முறையில் மாற்றங்களைச் செய்யப்போவதாகக் கூறிக்கொள்கிறார்.ஆனால், அரசாங்கத்தில் இருந்தபோது எந்த நல்ல மாற்றத்தையாவது கொண்டுவந்தாரா?
அம்னோவின் அடுக்கதிகாரத்தில் மேலேமேலே போய்ப் பிரதமாராகும் ஆர்வம் மட்டுமே அவருக்கு இருந்தது”.
மாற்றரசுக்கட்சியின் தந்திரங்களில் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றும் மகாதிர் கேட்டுக்கொண்டார்.