அம்னோ தலைவர்கள் மலாய்க் கிராம நிலம் ஒன்றை தனியார் மேம்பாட்டாளரிடம் விற்பனை செய்த இன்னொரு சம்பவத்தை அம்பலப்படுத்தப் போவதாக பினாங்கு முதலாவது துணை அமைச்சர் மான்சோர் ஒஸ்மான் வாக்குறுதி அளித்துள்ளார்.
பாலிக் புலாவ்-வில் கம்போங் தெராங்கில் மலாய் சமூகத்துச் சொந்தமான நிலத்தை இரண்டு அம்னோ தலைவர்கள் விரைவான ஆதாயத்துக்காக விற்றதாக கூறப்படும் சம்பவத்தை போன்றதே அது என அவர் சொன்னார். ஆனால் அதனை அவ்விருவரும் மறுத்துள்ளனர்.
பத்து உபானில் தங்கள் நிலத்திலிருந்து மெர்தேக்கா தினத்துக்குள் வெளியேறுமாறு நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் பூமிபுத்ரா மேம்பாட்டாளர் ஒருவரிடமிருந்து அறிவிக்கைகளைப் பெற்ற 22 கிராம மக்களைச் சந்தித்த போது மான்சோர் அதனைத் தெரிவித்தார்.
முந்திய மாநில அரசாங்கம் நிலத்தை விற்பனை செய்ததின் விளைவாக வெளியேற்றப்பட்ட கிராம மக்களில் கம்போங் புவா பாலா, சுங்கை நிபோங், செபராங் பிராயில் பல நிலங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என அவர் குறிப்பிட்டார்.
“முறையான இழப்பீடுகள் ஏதுமில்லாமல் மேம்பாட்டாளர்கள் குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது வழக்கமான நடவடிக்கையாகி விட்டது. நடப்பு நிர்வாகம் அந்த பிரச்னைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளதால் அவற்றை தீர்ப்பதில் வெற்றி கண்டுள்ளது.”
“தங்கள் நிலத்தைக் கோருவது மேம்பாட்டாளர்களுடைய உரிமை ஆகும். அவர்கள் நீதிமன்ற ஆணையையும் பெறலாம். ஆனால் அந்த நிலத்தை மேம்படுத்துவதில்லை என்பது மாநில அரசின் உரிமையாகும். ஆகவே தயவு செய்து எங்களுடன் விவாதியுங்கள். யாருடைய தூண்டுகோலின் பேரிலும் செயல்பட வேண்டாம்.” என்றார் மான்சோர்.
பத்து உபான் விவகாரத்தில் வெளியேறுமாறு கொடுக்கப்பட்ட அறிவிக்கைகள் குறித்து தாம் ‘வருத்தமும் ஏமாற்றமும்” அடைந்துள்ளதாக அவர் சொன்னார். காரணம் அவரது சொந்த வீடு அந்தப் பகுதியில் உள்ளது. ‘அடுத்த தரப்பிலிருந்து’ உதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில் தமது அண்டை வீட்டுக்காரர்கள் தம்மை அணுகவில்லை என்றார் அவர்.
“அவர்கள் அம்னோவிடம் சென்றனர். அங்கு எந்த உதவியும் கிடைக்காது எனத் தெரிந்ததும் அவர்கள் எங்களிடம் வந்தனர்,” என மான்சோர் வருத்தத்துடன் தெரிவித்தார். அந்தச் சந்திப்பின் போது முதலமைச்சர் லிம் குவான் எங்-கும் உடனிருந்தார்.