‘அம்னோ முகநூல்’ புலனாய்வு 114ஏ பிரிவின் கீழ் அல்ல

சமய உணர்வுகளைத் தூண்டக் கூடிய பதிவு மீது ‘Pemuda Umno Malaysia’ முக நூல் பக்கத்தை புலனாய்வு செய்வதற்கு போலீசார் ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவைப் பயன்படுத்தாது.

அந்தப் பதிவுக்கு தான் பொறுப்பல்ல என அம்னோ இளைஞர் பிரிவு கூறியுள்ளது.

114ஏ பிரிவு குற்றத்தைக் குறிப்பிடாமல் நீதிமன்றத்தில் ஒரு குற்றத்தை நிரூபிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடைமுறையைக் குறிப்பதே அதற்கு காரணம் என கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கூ சின் வா கூறினார்.

“தொடக்கத்தில் நாங்கள் அந்த விஷயத்தை தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் புலனாய்வு செய்வோம். நாங்கள் விசாருத்து எங்கள் முடிவுகளை ஒப்படைப்போம்,” என அவர் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

“எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்துவது சட்டத்துறைத் தலைவரைப் பொறுத்ததாகும். அது 114, 115, 116 அல்லது எதுவாக இருந்தாலும் அது சட்டத் துறைத் தலைவரைச் சார்ந்துள்ளது.”

233வது பிரிவு தொடர்பு வசதிகளை அல்லது தொடர்புச் சேவைகளை முறை தவறிப்  பயன்படுத்துவது சம்பந்தப்பட்டதாகும்.

அதன் கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுகின்றவர்களுக்கு 50,000 ரிங்கிட்டுக்கு மேற்போகாத அபராதம் அல்லது ஒராண்டுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் அந்தக் குற்றம் தொடர்ந்து செய்யப்படும் ஒவ்வொரு நாளுக்கும் மேலும் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட முடியும்.

ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதின் நேற்று கூறியிருந்தார்.

 

TAGS: