தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்ற தேர்வுக்குழு(பிஎஸ்சி)வின் பரிந்துரைகளைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் செயல்படுத்தத் தவறிய தேர்தல் ஆணைய (இசி) த்தை டிஏபி கட்சியின் ராசா எம்பி அந்தோனி லோக் சாடியுள்ளார்.
அப்பரிந்துரைகளைச் செயல்படுத்தாமலிருப்பதற்கு கடந்த நான்கு மாதங்களாக இசி பல்வேறு சாக்குபோக்குகளைக் கூறிக்கொண்டிருப்பதாக அவர் குறைப்பட்டுக்கொண்டார்.
ஒன்பது பேரடங்கிய பிஎஸ்சி-இல் ஒருவராக லோக்கும் இடம்பெற்றிருந்தார். அக்குழு முன்வைத்த பரிந்துரைகளில் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும்.அது இன்னும் செய்யப்படவில்லை என்றாரவர்.
மற்ற பரிந்துரைகளில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் அமையும் பராமரிப்பு அரசாங்கத்துக்கான வழிகாட்டும் விதிமுறைகள், வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்தல் ஆகியவையும் அடங்கும்.
பிஎஸ்சி-இன் பரிந்துரைகள் ஏப்ரல் 2-இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவற்றைச் செயல்படுத்த இசி-க்கு 45நாள்களிலிருந்து மூன்று மாதங்கள்வரை அவகாசம் வழங்கப்பட்டது என்று லோக் தெரிவித்தார்.ஆனால், இன்றுவரை எதுவும் செய்யப்படவில்லை.
“பிஎஸ்சி அறிக்கை நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டு நான்கு மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது ஆனால், பரிந்துரைகளைச் செயல்படுத்த இசி முனைப்புக் காண்பிக்கவில்லை”, என்றாரவர்.