கிளந்தானில் ஹூடுட் சட்டத்துக்கு அன்வார் ஆதரவு

கிளந்தானில் ஹூடுட் சட்டம் செயல்படுத்துவதைத் தனிப்பட்ட முறையில் தாம் ஆதரிப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். அது முஸ்லிம்-அல்லாதாரின் உரிமைகளை மீறாது என்றும் அதில் நீதி நிர்வாகத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

“கொள்கை அளவில் அதை அங்கு செயல்படுத்தலாம் என்றே நம்புகிறேன்.நீதி நிர்வாகம் தொடர்பில் அதில் தெளிவான உத்தரவாதங்கள் உண்டு.

“அது எவ்வகையிலும் முஸ்லிம்-அல்லாதாரின் உரிமைகளை மீறாது”. இன்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் சந்தித்தபோது அன்வார் இவ்வாறு கூறினார்.

இவ்விசயத்தில் தாம் தெரிவிக்கும் கருத்து தம் தனிப்பட்ட கருத்து என்றும் அது பக்காத்தான் கருத்தல்ல என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

பாஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள கிளந்தானில் ஹூடுட் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவரத் தயரா என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் சவால் விட்டதற்கு எதிர்வினையாக அன்வார் இவ்வாறு கூறினார்.

ஹூடுட் சட்டம் தொடர்பில் மகாதிருக்கும் கிளந்தான் மந்திரி புசார் நிக் அசீஸ் நிக் மாட்டுக்குமிடையில் சர்ச்சை ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. பாஸ் இஸ்லாமியக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு டிஏபிதான் தடையாக இருக்கிறது என்று மகாதிர் கூறியதை அடுத்து ஜூன் மாதம் இச்சர்ச்சை தொடங்கியது.

பாஸ் கட்சித் தேர்தலில் பக்காத்தான்-ஆதரவு அல்லது முற்போக்குத் தலைவர்கள் பெரும்பாலான பதவிகளுக்கு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மகாதிர் அவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதற்கு நிக் அசீஸ், ஹூடுட் கொண்டுவருவதற்குச் சட்ட நடவடிக்கைகள் மூலம்  தடை போட்டவர் மகாதிர்தானே தவிர டிஏபி தலைவர் கர்பால் சிங் அல்ல என்று திருப்பி அடித்தார்.

நேற்று மகாதிர், தாம் இப்போது பிரதமர் அல்ல என்பதால் நிக் அசீஸ் தம்மீது பழி போடக்கூடாது என்றும் சட்ட சிக்கல் எதுவும் இருந்தால் அதை விலக்க புத்ரா ஜெயாவை அணுக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இப்போது அன்வார் இந்த விசயத்தில் கருத்துத் தெரிவித்திருப்பது பக்காத்தானில் ஓர் உறுப்புக்கட்சியாக இருக்கும் மதச்சார்ப்பற்ற கொள்கைக்குப் போராடும் டிஏபி-க்கு அதிருப்தியை உண்டுபண்ணலாம்  என்று கருதப்படுகிறது.