பினாங்கு பிகேஆர் தலைவர் மன்சூர் ஒத்மான், கட்சியின் முக்கிய வியூகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விசயங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பது கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார்.
கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் இணையத்தளத்தில் பிரபலமில்லாத ஒரு வலைப்பதிவில் வரிக்கு வரி சரியாக வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டு “ஏமாற்றமடைவதாக” முதலாவது துணை முதலமைச்சருமான மன்சூர் கூறினார்.
“அதை ஆராய்கிறோம்.கொஞ்ச நாள் பொறுங்கள். கூட்டத்தில் கவலையுடன் விவாதிக்கப்பட்ட விசயங்கள் அப்படியே வெளியிடப்பட்டுள்ளன.இவை எப்படிக் கசிந்தன என்பதுதான் புரியவில்லை”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
‘Gelagat Anwar’ என்ற தலைப்பைக்கொண்ட அவ்வலைப்பதிவில் ஜூன்16,17,18 ஆகிய நாள்களில் இடப்பட்ட இடுகைகளில் அக்கூட்டத்தில் கலந்துகொண்டோர் விவரமும் இட ஒதுக்கீடு,பினாங்கில் அக்கட்சி எதிர்நோக்கும் பிரச்னைகள் போன்றவைமீது நடந்த விவாதங்களும் வெளியிடப்பட்டிருந்தன.
அதில், மன்சூருடன் பிகேஆர் மாநிலத் துணைத் தலைவர் லாவ் சூ கியாங், புக்கிட் பெண்டாரா துணைத் தலைவர் பிலிக்ஸ் ஊய், பாயான் பாரு துணைத் தலைவர் டான் செங் கீட், தஞ்சோங் இளைஞர் தலைவர் இங் செக் சியாங், பத்து உபான் தலைவர் ஜான் ஊய், துணை முதலமைச்சரின் உதவியாளரும் பாயான் பாரு பிகேஆர் உறுப்பினருமான ஜான் ஊய் ஆகியோர் கலந்துகொண்டனர்.கெபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் ஜேசன் ஒங் கான் லீ மட்டும் அதில் கலந்து கொள்ளவில்லை.
கூட்டத்தில் கலந்துகொண்டோரை அணுகி கருத்துரைக்குமாறு கேட்டதற்கு எல்லாருமே “மன்சூரைக் கேளுங்கள்” என்று ஒரே குரலில் கூறிவிட்டார்கள்.
2008-நிலை தொடரும்
அக்கூட்டம் பிகேஆரின் சீன வேட்பாளர்கள்மீது கவனம் செலுத்தியதாக தெரிகிறது.மாச்சாங் பூபோக் சட்டமன்ற உறுப்பினர் டான் ஹொக் லியோங் தவிர்த்து மற்ற அனைவரும் அவர்களின் தற்போதைய இடங்களைத் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவர் என்று மன்சூர் தெரிவித்தார்.
அண்மையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட டானுக்குப் பதில் பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவரை அங்கு நிறுத்தலாம் என்று கூட்டத்தில் முன்மொழியப்பட்டது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது.
2008இல் செய்ததைப்போல் ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும் சீன வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவர் என்று மன்சூர் கூறினார்.
அரசியல் சுனாமி ஏற்பட்டு மாநில அரசைப் பக்காத்தான் கைப்பற்ற வகைசெய்த அத்தேர்தலில், பிகேஆர் 16இடங்களில் போட்டியிட்டு ஒன்பதைக் கைப்பற்றியது.
டிஏபி 19 இடங்களில் போட்டியிட்டு அத்தனையிலும் வென்றது. பாஸ் ஐந்து இடங்களில் போட்டியிட்டு பெர்மாத்தாங் பாசிர் தவிர மற்ற இடங்களில் தோல்வி கண்டது. எஞ்சிய 11 இடங்களையும் அம்னோ கைப்பற்றியது.
சர்ச்சைக்குரிய பந்தாய் ஜெரெஜாக் பற்றிக் குறிப்பிட்ட மன்சூர், அது சீனர்கள் அதிகம் வாழும் இடம் என்றார். எனவே, அத்தொகுதிக்கு பினாங்கு முனிசிபல் மன்ற உறுப்பினர் ரஷீட் ஹஸ்னூரின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தாலும் அங்கு சீன வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படும் வாய்ப்பே அதிகம் உண்டு என்றாரவர்.
“வெற்றியளிக்கும் அம்சங்களையும் கருத்தில்கொள்ள வேண்டும்.பந்தாய் ஜெரெஜாக்கில் சீனர் போட்டியிட்டால்தான் வெற்றிபெற முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.ஆனால், மேலிடம்தான் அதை முடிவு செய்ய வேண்டும்”.
மன்சூர், பந்தாய் ஜெரஜாக்கில் பிலிக்ஸ் ஊய்-யை நிறுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளார்.ஆனால், பிகேஆர் மேலிடம் அதை ஏற்க வேண்டும்.
சீன வேட்பாளர்கள் ஒரு மிரட்டல்
பிகேஆரிடமிருந்து டிஏபி எந்த இடத்தையாவது விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறதா என்ற வினாவுக்கு தாம் எந்த இடத்தையும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்று மன்சூர் கூறினார்.
இந்தத் தடவை தொகுதிகள் தொடர்பில் டிஏபிக்கும் பிகேஆருக்குமிடையில் சிறுசிறு பூசல்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதற்கு அதை உறுதியாகச் சொல்ல முடியாது ஏனென்றால் எதுவும் இன்னும் இறுதியாகவில்லை என்றார்.
மாநில நிர்வாகத்தில் தமக்கு எஜமானராகவுள்ள முதலமைச்சர் லிம் குவான் எங், “பிடிவாதக்காரர்” என்றும் பினாங்கு மக்களுக்கு அவர் “தெய்வமாக”க் காட்சியளிக்கிறார் என்றும் மன்சூர் குறிப்பிட்டார்.
“அவர் (குவான் எங்) பிடிவாதமிக்கவர்….அவரைச் சமாளிப்பது எளிதல்ல. இப்போது பிடிவாதம் கூடியுள்ளது.
“அவர்கள்( டிஏபி) 19(இடங்கள்) வெல்வது உறுதி. இப்போது கூடுதல் இடங்களைக் கேட்கிறார்கள்.கூடுதலாக இரண்டு இடங்கள் இருந்தால் அவர்கள் சொந்தமாகவே அரசை அமைக்கலாம். நம் ஆள்களைக்கூட அவர்கள் பக்கமாக இழுத்துக்கொண்டு நம்மை (பிகேஆர்)க் கைவிடலாம்”, எனவும் அவர் எச்சரித்தார்.
டிஏபி-இன் கோரிக்கைக்கு பிகேஆர் விட்டுக்கொடுக்காவிட்டால் மும்முனை போட்டி நிகழும் வாய்ப்புப் பற்றிக் குறிப்பிட்ட மன்சூர் “நாம் விடமாட்டோம், போராடுவோம்”, என்றார்.மேலும் 10சீன வேட்பாளர்களைக் கொண்ட ஒரு பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
பிரச்னைக்குரிய தொகுதிகள்
மாநிலத்தில் சில தொகுதிகள் பிரச்னைக்குரியவையாக விளங்குவது பற்றியும் மன்சூர் அக்கூட்டத்தில் கவலை தெரிவித்துக்கொண்டார். அவற்றில் ஒன்று தாசெக் குளுகோர்.அம்னோ வசமுள்ள அத்தொகுதி “பணம் கேட்பதாக” அவர் சொன்னார்.
அத்தொகுதி பாஸ் கட்சியிடம் ஒப்படைக்கப்படலாம் என்றாரவர். பாஸ், இம்முறை கூடுதலாக ஒரு தொகுதியில், மொத்தம் ஆறு தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.
சுங்கை ஆச்சே தொகுதி, “தலைவர் (மாற்றரசுக் கட்சித் தலைவரும் பிகேஆர் நடப்பில் தலைவருமான அன்வார் இப்ராகிம்) வருகையைப் புறக்கணிக்குமாறு”அதன் உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் மன்சூர் புகார் தெரிவித்தார்.
“இந்தக் கடிதம் அம்னோவிடம் கிடைத்தால் என்னவாகும்? நம் கதை முடிந்துவிடும்”, என்றவர் வருத்தப்பட்டார்.
பக்காத்தான் புத்ராஜெயாவைக் கைப்பற்றும் வாய்ப்புகளும் அக்கூட்டத்தில் அலசி ஆராயப்பட்டன.
தம் உதவியாளர்கள் ஒன்று திரள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மன்சூர், சீன உறுப்பினர்கள் கட்சியின் பலஇன முகத்தைக் காண்பிக்க மலாய்க்காரர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றார்.
“அம்னோவை விரட்டுவதுதான் நம் வேலை. அதற்காக எதையும் தாங்கிக்கொள்ள வேண்டும். அம்னோவுக்கு இம்மியளவும் விட்டுக் கொடுக்கக்கூடாது.. இதுபோன்ற தவறு செய்யக்கூடாது”, என்றார்.