நஸ்ரி: பகுதி 114ஏ-இல் எந்த மாற்றமும் செய்யப்படாது

சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும் ஆதாரச் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட பகுதி114ஏ திருத்தம் அப்படியே இருக்கும், அதில் மாற்றம் இராது என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ்.

கோலா கங்சாரில் செய்தியாளர்களிடம் பேசியபோது நஸ்ரி இவ்வாறு கூறினார்.

“அச்சட்டம் அப்படியே இருக்கும்.மாற்றரசுக் கட்சியும் அதை எதிர்ப்பதில் அவ்வளவாக முனைப்புக் காட்டவில்லை”, என்றவர் கூறியதாக மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான் அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் ஆதாரச் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட பகுதி114ஏ- திருத்தத்தின்படி ஒரு மனிதருக்கு அல்லது அமைப்புக்குச் சொந்தமான இணையத்தளத்தில் வெளியிடப்படும் ஒரு இடுகை அந்த மனிதரால் அல்லது அந்த அமைப்பால் எழுதப்பட்டதாகத்தான் கருதப்படும்.

அந்த இடுகையை அந்த மனிதரோ அமைப்போ  எழுத வில்லையென்றால் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை அவர்கள்தான் நிரூபிக்க வேண்டும்.

இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சர்ச்சைக்குரிய திருத்தம் குறித்து “விவாதிக்குமாறு” பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அமைச்சரவையைப் பணித்தார்.

ஆனால், துணைப் பிரதமர் முகைதின் யாசின் தலைமையில் கூடிய அமைச்சரவை சட்டத்திருத்தத்தில் எந்த மாற்றமும் தேவையில்லை என முடிவு  செய்துள்ளது. 

 

TAGS: