கசிந்த கூட்டக் குறிப்புக்கள்: டிஏபி பிகேஆரிடமிருந்து பதில் கோருகிறது

வெளியில் கசிந்து விட்ட பிகேஆர் கட்சியின் கூட்டக் குறிப்புக்களில் காணப்படும் விவரங்கள் மீது டிஏபி, பிகேஆர்-இடம் விளக்கம் கோரியுள்ளது. அந்தக் குறிப்புக்களில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கை இழிவுபடுத்தும் கருத்துக்களும் அடங்கியுள்ளன.

லிம்-மை மாநில பிகேஆர் தலைவர் மான்சோர் ஒஸ்மான் ‘கர்வம் பிடித்த’ தலைவர் என வருணிக்கும் விஷயமும் கசிந்த ஆவணங்களில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களும் காணப்படுவதாக மாநில டிஏபி தலைவர் சாவ் கோன் இயாவ் கூறினார்.

கூட்டக் குறிப்புக்களில் பிகேஆர் தலைவர்கள் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது போல பினாங்கில் அதிகமான இடங்களில் போட்டியிட விரும்புவதாகச் சொல்லப்படுவதை சாவ் மறுத்தார்.

பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகள் சம்பந்தப்பட்ட மும்முனைப் போட்டி ஏற்படும் சாத்தியத்தையும் அவர் நிராகரித்தார்.

“பினாங்கில் இட ஒதுக்கீடுகள் தொடர்பாக செய்தி இணையத் தளத்தில் வெளியான எந்தக் கருத்துக்களும் தேர்தல் குறித்து பிகேஆர் கட்சிக்குள் நடத்தப்படும் விவாதமாகும்.அது உண்மை நிலையை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை,” மாநில ஆட்சி மன்ற உறுப்பினருமான சாவ் சொன்னார்.

பிகேஆர் கூட்டக் குறிப்புக்கள் கசிந்ததை ஒப்புக் கொண்ட மான்சோர் அதன் உள்ளடக்கம் பிகேஆர் கட்சி உறுப்பினர்களுடைய ‘உண்மையான கவலையை’ பிரதிபலிப்பதாக இன்று  மலேசியாகினியில் வெளியான செய்திக்கு சாவ் பதில் அளித்தார்.

‘கர்வம் பிடித்த தொக்கோங்’

பினாங்கு பிகேஆர் மார்ச் 19ம் தேதி நடத்திய வியூகக் கூட்டத்தின் குறிப்புக்களே கசிந்து விட்ட குறிப்புக்களாகும். அவை ஜுன் மாதம் “Gelagat Anwar” என்னும் வலைப்பதிவில் வெளியாயின.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இட ஒதுக்கீடுகள் பற்றி மான்சோர் உட்பட பல பிகேஆர் தலைவர்கள் விவாதித்துள்ளது அந்த ஆவணங்கள் வழி தெரிய வந்துள்ளது.

அந்தக்  கூட்டத்தில் சில பிகேஆர் தலைவர்கள் டிஏபி-யுடன் நடத்தப்படும் இட ஒதுக்கீட்டுப் பேச்சுக்கள் பற்றி கவலை தெரிவித்தனர். பினாங்கில் மூன்று பக்காத்தான் கட்சிகளில் ஆதிக்கம் பெற்றுள்ளது டிஏபி ஆகும். மும்முனைப் போட்டி ஏற்படக் கூடிய சாத்தியத்தையும் அந்தக் கூட்டம் விவாதித்தது.

தாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என உறுதி அளித்த மான்சோர், டிஏபியுடன் மும்முனைப் போட்டியை எதிர்நோக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் குறைந்தது 10 சீன உறுப்பினர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியலைத் தயாரிக்குமாறு துணைத் தலைவர் லாவ் சூ கியாங்-கிற்கும் ஆணையிட்டார்.

பிகேஆர் சீன வேட்பாளர்கள் செல்வாக்கு டிஏபி-க்கு ‘மருட்டல்’ என்றும் மான்சோர் சொன்னார்.

லிம் மென்மேலும் ‘கர்வம் பிடித்தவராக’ மாறி வருவதால் அவருடன் வேலை செய்வது சிரமமாகி வருவதாகவும் மான்சோர் சொன்னதாகக் கூட்டக் குறிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்றாலும் உள்ளூர் சீனர்கள் லிம்-மை தொக்கோங் (ஹொக்கியான் மொழியில் தெய்வம்) எனப் போற்றுவதாகவும் மான்சோர் தெரிவித்துள்ளார்.

நாளை நிருபர்கள் சந்திப்பு

லிம்-உடன் தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர், தாம் அது பற்றி மான்சோருடன் பேசி விட்டதாகவும் மான்சோர்  மனநிறைவைத் தரும் விளக்கத்தை தமக்கு அதிகாரப்பூர்வமாக அளித்துள்ளதாகவும் சொன்னார்.

கொம்தாரில் நாளை காலை 11 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிருபர்கள் சந்திப்பில் மான்சோருடன் லிம்-மும் கலந்து கொள்வார்.

லிம் பற்றித் தாம் சொன்னதாக கசிந்த கூட்டக் குறிப்புக்களில் காணப்படும் கருத்துக்களை மான்சோர் அப்போது மறுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்றாலும் மான்சோர் அப்படிச் செய்தால் அந்தக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட விஷயங்கள் ‘உண்மையான கவலைகள்’ என நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் அவர் கூறியதற்கு முரணாக அமைந்து விடும்.

 

TAGS: