ராயிஸ்: “பெர்சே பேரணி பங்கேற்பாளர்களுக்கு தலா 50 ரிங்கிட் கொடுக்கப்பட்டது”

கூட்டரசு தலைநகரில் ஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணியில் பங்கு கொண்டவர்களுக்கு அந்த விவகாரத்தில் தனிப்பட்ட அக்கறை கொண்டவர்கள் உண்மையில் பணம் கொடுத்ததாக தகவல் பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் நேற்று கூறியிருக்கிறார்.

மஞ்சள் நிற டி சட்டையை அணிந்து அந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளர்களில் சிலருக்கு தலா 50 ரிங்கிட் தரப்பட்டதாக அவர் சொன்னார்.

பணத்துடன் இலவச உணவும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் ராயிஸ் தெரிவித்தார்.

மஞ்சள் சட்டை அணிந்தவர்கள் அல்லது அவர்களுடைய தலைவர்கள் எடுத்த நடவடிக்கைகள், அவர்கள் அரசியல் வெகுமதிகளுக்காக செயல்பட்டதை நிரூபித்துள்ளது,” என பெல்டா லூய் தீமூர் மக்களுடன் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் அவர் கூறினார்.

அந்த விவகாரம் ( சாலை ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்வதற்குப் பணம் கொடுக்கப்பட்டது) தமது அமைச்சின் ஜாசா என்ற சிறப்பு விவகாரத்துறை உட்பட பல்வேறு அமைப்புக்கள் தொகுத்துள்ள தகவல்களில் அடங்கியுள்ளதாக ராயிஸ் சொன்னார்.

இதனிடையே மக்கள் லண்டன் கலவரங்களிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ளுமாறு பொது மக்களைக் குறிப்பாக பெர்சே 2.0 பேரணியில் கலந்து கொண்டவர்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

“லண்டனில் நடந்ததுடன் ஒப்பிடுகையில் பேரணியின் போது நிலைமையைக் கட்டுப்படுத்தவும் பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்ளவும் அரச மலேசியப் போலீஸ் படையினர் பணிவன்புடன் நடந்து கொண்டனர்”, என்றார் அவர்.

மற்ற நாடுகளில் போலீசார் சட்டத்தை அமலாக்குவதற்கு முரட்டுத் தனமாக நடந்து கொள்ளத் தயங்குவது இல்லை. ஆனால் மலேசியப் போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்கள் மூர்க்கத்தனத்துடன் நடந்து கொண்டு தவறான சொற்களைப் பயன்படுத்திய போதிலும் மிகுந்த சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் கடைப்பிடித்தனர் என ராயிஸ் தெரிவித்தார்.

பெர்னாமா