அரசமைப்புச் சட்ட திருத்தங்களை 1993 ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் தேச நிந்தனையான எதனையும் கூறவில்லை. மாறாக, அவர் ஆட்சியாளர் அமைப்பு முறையைத் தற்காத்தார் என்று அரசு வழக்குரைஞர் நூரின் படாருடின் இன்று (ஆகஸ்ட் 24) நீதிமன்றத்தில் வாதிட்டார்.
“அரசமைப்புச் சட்ட வரம்பிற்குட்பட்ட முடியரசுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவற்றை மக்கள் செய்திருக்க முடியும்.
“(ஆட்சியாளர்கள்) மக்களின் நன்மதிப்பை இழப்பதற்கு முன்னர் அவர்கள் தங்களுடைய நடத்தைக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வகை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தை அவர் (மகாதிர்) உருவாக்கினார்.
“மகாதிர் அரசமைப்புச் சட்ட வரம்பிற்குட்பட்ட முடியரசு குறித்து கேள்வி எழுப்பவில்லை. அவர் அதைத் தற்காத்தார்”, என்று நூரின் வாதிட்டார்.
முன்னாள் பிரதமரையும், இன்னும் பலரையும் அவருக்கு எதிரான தேச நிந்தனை வழக்கில் சாட்சிகளாகக் கொண்டுவர புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற ஆணைக்கான மனுவை நிராகரிக்கக் கோரி வாதிட்ட நூரின் அவர்கள் இந்த வழக்கிற்கு முக்கியமான சாட்சிகள் அல்லர் என்றார்.
அக்காலக்கட்டத்தில் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள், குறிப்பாக 1992 ஆண்டின் “கோமஸ் சம்பவம்”, சட்ட நடவடிக்கைகளிலிருந்து ஆட்சியாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த விதிவிலக்கைப் பறிப்பதற்காக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.
1992 ஆண்டு நடந்த அச்சம்பவத்தில், ஜொகூர் மாநில ஹாக்கி பயிற்றுனர் டக்ளஸ் கோமஸ் அம்மாநில ஹாக்கி குழுவை ஒரு போட்டியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு ஜொகூர் சுல்தான் விடுத்த கட்டளையைக் குறை கூறியதற்காக அவர் ஜொகூர் அரண்மனைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டு அங்கு அவர் ஜொகூர் சுல்தானால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அப்போது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்கள் தாம் கூறியதாக சொல்லப்படும் தேச நிந்தனையைவிட கடுமையானவையாகும் என்று கர்பால் வாதிட்டார்.
அந்த விவாதங்கள் குறித்து எந்த ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்படாத போது தமக்கு எதிராகக் குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்பதோடு அரசமைப்புச் சட்டத்திற்கும் முரணானது என்று தமக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு வாதிட்ட கர்பால் கூறினார்.
2008 ஆம் ஆண்டில் பேராக் மாநில ஆட்சி மாற்றத்தில் அம்மாநில சுல்தானின் பங்கிற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று பெப்ரவரி 6, 2009 இல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியதற்காக தேச நிந்தனைச் சட்டம் செக்சன் 4(1)(b) இன் கீழ் கர்பால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், கர்பாலுக்கு மூன்று ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது ரிம5,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் வித்திக்கப்படலாம்.
கர்பால்: சாட்சிகள் மிக முக்கியம்
சட்டத்துறை தலைவரின் அவருக்குரிய உசிதப்படி செய்யும் உரிமை முறையாக பயன்படுத்தப்படாததால், தமக்கு எதிரான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யக் கோரும் தமது மனுவை ஆதவு சேர்க்க கர்பால், முன்னாள் சட்டத்துறை தலைவர் அபு தாலிப் ஓத்மான், தற்போதைய சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேல் மற்றும், அமைச்சரவை சட்டத்துறை தலைவரின் ஆலோசனைக்கு ஒப்ப செயல்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டு, மகாதிர் ஆகியோரை சாட்சிகளாக்க நீதிமன்ற ஆணையைக் கோரியுள்ளார்.
ஆனால், அவர்களின் சாட்சியங்கள் பயனற்றவைகளாகும் என்பதோடு அவர்களை சாட்சிகளாக்க நீதிமன்ற ஆணை கோருவது நீதிமன்ற நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று நூரின் எதிர்வாதம் செய்தார்.
“இந்த சாட்சிகள் அனைவரும் பொருத்தமானவர்கள் அல்லர் என்பதோடு தற்காப்புக்கு உதவ இயலாது”, என்று கூறிய நூரின் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு மீது சரியான சந்தேகத்தை எழுப்பக்கூடிய சாட்சிகளை கர்பால் அழைக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.
1993 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கூறப்பட்டவை தேச நிந்தனையானவை என்றாலும், கர்பாலின் வழக்கிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், அரசமைப்புச் சட்ட விதி 145 இன் கீழ் யார் மீது குற்றம் சாட்டுவது என்ற உரிமை சட்டத்துறை தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையில் நீதிமன்றம் தலையிட இயலாது என்றும் அவர் வாதிட்டார்.
சட்டத்தின் முன் சமம் என்ற அரசமைப்புச் சட்ட விதி 8 டும் இதற்கு உட்பட்டது என்றாரவர்.
“ஆகவே, ஏஜியின் (சட்டத்துறை தலைவரின்) உசிதப்படி செய்யும் உரிமை முழுமையானது என்பதோடு அது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியாது…நீதிமன்றம் அதை அனுமதிக்கக்கூடாது”, என்றாரவர்.
எனினும், தம்மை மட்டும் பொறுக்கியெடுத்து குற்றம் சாட்டுவது சட்டப் பிரிவு 8 இன் கீழ் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும் என்ற தமது வாதத்திற்கு இந்த சாட்சிகள் மிக முக்கியம் என்று பதில் அளித்த கர்பால், சட்ட பிரிவு 145 சட்டப் பிரிவு 8 க்கு உட்பட்டதே தவிர 8, 145 க்கு உட்பட்டதல்ல என்பதை சுட்டிக் காட்டினார்.
இல்லையென்றால், “அது குழப்பத்தை ஏற்படுத்தும்” என்றாரவர்.
சாட்சிகளுக்கு நீதிமன்ற ஆணை பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்த தீர்ப்பு அடுத்த வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிபதி அஸ்மான் அப்துல்லா கூறினார்.