2012ம் ஆண்டுக்கான ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும், திருத்த வேண்டும் அல்லது ரத்துச் செய்ய வேண்டும் என சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்னும் அடிப்படை சட்டக் கோட்பாட்டுக்கு முரணாக அந்தப் பிரிவு அமைந்துள்ளது என சுஹாக்காம் தலைவர் ஹாஸ்மி கூறினார்.
அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 19வது பிரிவில் கூறப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரம் என்ற மனித உரிமைக் கோட்பாட்டையும் அனைத்துலக சிவில் அரசியல் உரிமைகள் கோட்பாட்டையும் புதிய சட்டம் மீறுவதாகவும் அவர் சொன்னார்.
“114ஏ பிரிவின் கீழ் ஊகத்தை மறுக்க முடியும் என்றாலும் அந்த ஊகம் சுமத்தப்பட்டவருக்கு அதனை மறுப்பதற்கு போதுமான நேரமும் வளமும் இணையச் சூழலில் தொழில்நுட்ப நிபுணத்துவமும் இல்லாமல் இருக்கலாம்,” என அவர் நேற்றிரவு கோலாலம்பூரில் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
அதற்கு நேர்மாறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு அரசு தரப்பு சிறந்த வசதிகளைப் பெற்றிருக்கக் கூடும். ஏனெனில் விசாரணைக்கு உதவி செய்யுமாறு எந்த ஒரு சாட்சியையும் கட்டாயப்படுத்துவதற்கான அதிகாரத்தை அது பெற்றுள்ளது. அதே வேளையில் தொழில் நுட்ப நிபுணத்துவமும் வளங்களும் அதனிடம் உள்ளன என ஹாஸ்மி அகாம் மேலும் கூறினார்.
இணையத்தின் வாயிலாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது, கருத்துக்களைப் பரப்புவது, யோசனைகளையும் செய்திகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்வது ஆகியவை மீது 114ஏ பிரிவு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அந்தச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதிலும் அனைத்துலக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு இணங்க புதிய சட்டம் தயாரிக்கப்படுவதை உறுதி செய்வதிலும் சட்டத் துறைத் தலைவர் அலுவலகம், சம்பந்தப்பட்ட மற்ற தரப்புக்கள் ஆகியவற்றுடன் இணைந்து கொள்ள சுஹாக்காம் விரும்புகிறது.”
அந்தச் சட்டத்தை அரசாங்கம் மறு ஆய்வு செய்யப் போவதில்லை எனப் பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
பெர்னாமா