இறந்தவர் முஸ்லிமா?

[2-ம் இணைப்பு]

இன்று பிற்பகல் மணி 3.00 க்கு மரணமுற்ற லாரன்ஸ் செல்வநாதன், 33, என்பவரின் உடல் சிறம்பானிலுள்ள தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சடங்குகள் முடிவுற்ற பின்னர் அடக்கம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், போலீசாரும் நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய விவகார இலாகா அதிகாரிகளும் அவரது குடும்பத்தினரை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்தனர். அவர் இஸ்லாத்துக்கு மாறிவிட்டதாக அவர்கள் கூறினர்.

இதனால் குடும்பத்தினருக்கும் நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய விவகார இலாகா அதிகாரிகளுக்கும் இடையில் நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர் எம். ரவியின் உதவியுடன் இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கையில் அங்கிருந்தவர்களில் ஒருவர் லாரன்ஸ் செல்வநாதனின் உடலை தேவாலயத்திற்கு கொண்டுசெல்வதாக தெரிவித்தார்.

அதன் பின்னர், லாரன்ஸ்சின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் ரவிக்கு கைத்தொலைபேசி வழி தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்தகவலின்படி லாரன்ஸ் செல்வநாதனின் உடல் சிறம்பான் ஜாலான் டெம்பளரிலுள்ள மின்சுடலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டதாக தம்மிடம் கூறப்பட்டதாக நெகிரி மாநில சட்டமன்ற உறுப்பினர் எம். ரவி தொடர்பு கொண்டபோது கூறினார்.

 

முந்தைய செய்தி :

இன்று பிற்பகல் மணி 3.00 க்கு மரணமுற்ற லாரன்ஸ் செல்வநாதன், 33, என்பவரின் உடல் சிறம்பானிலுள்ள தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சடங்குகள் முடிவுற்ற பின்னர் அடக்கம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், போலீசாரும் நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய விவகார இலாகா அதிகாரிகளும் அவரது குடும்பத்தினரை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்தனர். அவர் இஸ்லாத்துக்கு மாறிவிட்டதாக அவர்கள் கூறினர்.

ஜென்னி என்று மட்டும் அடையாளம் கூறப்பட்ட அவரது உறவினர் போலீசார் அவரது பிடி லுக்குட் வீட்டிற்கு நண்பகல் 12.40 க்கு வந்து சவ அடக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று கூறியதாக தெரிவித்தார்.

லாரன்ஸ் மதம் மாறி விட்டார் என்று கூறப்படுவதை நிரூபிப்பதற்கு அவர்கள் ஒரு நகல் ஆவணத்தைக் காட்டியதாக ஜென்னி கூறினார்.

“அவர் மூன்று நாள்களுக்கு முன்புதான் மதம் மாறினார் என்று அவர்கள் கூறினர். அடையாள அட்டை எண் சரி, ஆனால் படம் இல்லை. அவரது கையொப்பம் அவருடையதுதானா என்பதில்கூட எங்களுக்கு நிச்சயமில்லை”, என்று அவர் மலேசியாகினி தொடர்பு கொண்டபோது
கூறினார்.

லோரி ஓட்டுநரான லாரன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது லோரியில் மயக்க நிலையில் கிடந்ததை அவரது குடும்பத்தினர் கண்டனர். நேற்றிரவு சிறம்பான் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இறப்பிற்கான காரணம் தெரியவில்லை.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில்

குடும்ப உறுப்பினர்களுக்கும் போலீசார் மற்றும் நெகிரி சமய விவகார இலாகாவினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக  இரு தரப்பினர்களுக்கிடையில் நடுவராக செயல்பட்ட போர்ட் டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் எம். ரவி கூறினார்.

குறைந்தது 30 அதிகாரிகள் அவரின் வீட்டிற்குச் சென்று உடலைக் கோரியதாக அவர் கூறினார். அதன் பின்னர் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் இறங்கினர். அது தொடர்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

மத மாற்றம் நடந்தது என்ற கூற்றை குடும்ப உறுப்பினர்கள் நம்பவில்லை. லாரன்ஸ் மதம் மாறினார் என்று கூறப்படுவதற்கு சாட்சியாக இருந்தவர் அதனை உறுதிப்படுத்துமாறு அழைக்கப்பட்டிருந்தும் அவர் காணப்படவில்லை என்பதை ரவி சுட்டிக் காட்டினார்.

“ஆவணத்தில் காணப்படும் கையொப்பம்கூட அவருடையதல்ல. அது அவருடைய (லாரன்ஸ்சின்) கையொப்பம் அல்ல என்பதை அவரது சகோதரர் உறுதிப்படுத்தினார்”, என்று ரவி மேலும் கூறினார்.

குடும்பத்திற்கு இது ஒரு சோகமான சூழ்நிலை. இழப்பின் மீது துயரப்படக்கூட முடியாத நிலை என்று ஜென்னி கூறினார்.