மெர்டேகா கொண்டாட்டம்:1மலேசியா சின்னத்தையே பயன்படுத்த அரசு முடிவு

இவ்வாண்டு மெர்டேகா தினக் கொண்டாட்டத்துக்கான சின்னமாக 1மலேசியா சின்னமே பயன்படுத்தப்படும் என்று தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.தொடர்ந்து மூன்றாண்டுகளாக அச்சின்னமே பயன்படுத்தப்படுகிறது.

செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஆறு வெவ்வேறு சின்னங்கள்  வெளியிடப்பட்டது அந்நிகழ்வை விளம்பரப்படுத்தும் முயற்சியாகும் என்று அமைச்சின் தலைமைச் செயலாளர் கமருடின் சியாராப் கூறினார்.

“அவையெல்லாம் விளம்பரத்துக்காக பயன்படுத்தப்பட்டன. ஆனால், ‘மெர்டேகா55 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன’ என்ற தொடர் எல்லாச் சின்னங்களிலும் இடம்பெற்றிருக்கும்”, என்று கமருடின் நேற்று செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

அவ்வாசகம், மலேசியா சுதந்திரம் பெற்று 55 ஆண்டுகள் ஆகிவிட்டதையும் அக்காலக்கட்டத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது என்பதையும் குறிக்கிறது என்றவர் விளக்கினார்.

கமருடின், மெர்டேகா தினக் கொண்டாட்டக் குழுவின் இறுதிக் கூட்டத்துக்குத் தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

டிவிட்டரில் உலகச் சாதனை புரியும் முயற்சி

இதனிடையே, மெர்டேகா தொடர்பில் 10,000மாணவர்களை ஒரே நேரத்தில்  டிவிட்டரில் பதிவிடச் செய்து உலகச் சாதனையை ஏற்படுத்த சிறப்பு விவகாரத் துறை(ஜயிஸ்) திட்டமிட்டு வருவதாக அதன் தலைமை இயக்குனர் புவாட் ஹசன் கூறினார்.

மாணவர்கள், சிறப்பு உடையும் தொப்பியும் அணிந்து  டாட்டாரான் மெர்டாகாவுக்கு  அழைத்துவரப்படுவார்கள். 

அங்கு அவர்கள் டிவிட்டர் பதிவிடும் அம்மாபெரும் நிகழ்வில் கலந்துகொள்வர்.

 “இரவு மணி 8.45இலிருந்து 9.45வரை ஒரு மணி நேரம் அவர்கள் அதில் ஈடுபடுவார்கள்”, என்றவர் விளக்கினார்.

அமைச்சு பத்தாயிரம் பேரை ஒன்றுதிரட்டி ஒரு மணி நேரத்துக்குள் அவர்களை டிவிட்டரில் பதிவிடச் செய்து உலகச் சாதனையை ஏற்படுத்துவதாக முயல்வதாக அவர் சொன்னார்.

 

 

TAGS: