பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அரசு ஊழியர்கள் மேலும் சிறந்த சாதனைகளைச் செய்ய பாரம்பரிய சிந்தனைப்போக்கிலிருந்து விலகி வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“பாரம்பரிய சிந்தனைப்போக்கிலிருந்து வெளிவரும் துணிச்சல் வேண்டும்,முடியாது என்பதை உடைத்தெறியும் துணிவு வேண்டும்,ஆக்கத்திறனும் புதுமுறைகாணும் போக்கும் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை எப்போதுமே வலியுறுத்தி வந்திருக்கிறேன்”, என்றாரவர்.
இன்று பிற்பகல்,தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தில்(ஐஜேஎன்), அம்மையத்துக்கு சிறந்த நிர்வாகத்துக்காக பிரதமரின் புத்தாக்க விருதை வழங்கிய நிகழ்வில் நஜிப் பேசினார்.
போட்டி நிறைந்த உலகில் புதுப்புது வளங்களை உருவாக்குவதே நாடு எதிர்நோக்கும் சவாலாகும் என்றாரவர்.
ஆக்கத்திறன் மூலமாகவும் புதுமுறைகாணும் போக்காலும்தான் அதைச் சாதிக்க முடியும்.
பொதுச் சேவைத் துறைக்கு இது மிகவும் பொருந்தும் என்று நஜிப் குறிப்பிட்டார்.
“போட்டிமிக்க உலகில் பொதுச் சேவை நிர்வாகத்தில் சிறந்து விளங்க வேண்டும். அதன்வழிதான் முன்னிலும் சிறப்பான சேவைகளை வழங்க முடியும்”, என்றாரவர்.
ஐஜேஎன்னுக்கு அவ்விருதுடன் ரிம1மில்லியன் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.