ஏஜி அலுவலகம்: பெர்சே 2.0 தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் முறையீடு செய்யாது

அரசு சார்பற்ற அமைப்புக்களைக் கொண்ட பெர்சே 2.0 கூட்டணி சட்ட விரோதமான அமைப்பு எனப் பிரகடனம் செய்வதற்கு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் விடுத்த ஆணையை ரத்துச் செய்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் முறையீடு செய்யாது.

அந்தத் தகவலை ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் முறையீடுகள், வழக்குப் பிரிவின் தலைவர் கமாலுதின் முகமட் சைட்  இன்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அரசாங்கம் முறையீடு செய்வதற்கான காலக் கெடு முடிந்து விட்டதைத் தொடர்ந்து மலேசியாகினி அவருடன் தொடர்பு கொண்டது.

“பெர்சே வழக்கில் முறையீடு இல்லை,” என கமாலுதின் சிறிய குறுஞ்செய்தியில் குறிப்பிட்டார்.

தூய்மையான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் அந்த அரசு சாரா அமைப்புக்களின் கூட்டணியை சட்ட விரோத அமைப்பு எனப் பிரகடனம் செய்வதற்கு கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் தேதி ஹிஷாமுடின் எடுத்த முடிவை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹானா யூசோப் ரத்துச் செய்ததை எதிர்த்து அரசாங்கம் முறையீடு செய்வதற்கு ஆகஸ்ட் 24 வரை காலக்கெடு இருந்தது.

ஆகவே பெர்சே 2.0 இனி அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக இருந்து வரும். அது பதிவு செய்யப்பட வேண்டியதில்லை. சங்கப் பதிவதிகாரியிடம் அந்தக் கூட்டணி பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை என ஏற்கனவே அதன் வழக்குரைஞர்கள் வாதாடியுள்ளனர்.

ஹிஷாமுடின், சங்கப் பதிவதிகாரி ஆகியோரது ஆணையை ஜுலை 24ம் தேதி ரத்துச் செய்த நீதிபதி ரோஹானா, அமைச்சரது ஆணையில் “நியாயமற்ற விஷயங்கள்” அடங்கியுள்ளதாகச் சொன்னார்.

‘சட்ட விரோதமானது ஆனால் அரசாங்கம் பெர்சே-யை சந்தித்தது

பெர்சே-யைச் சட்ட விரோதமானது எனப் பிரகடனம் செய்த போதிலும் அரசாங்கம் அதன் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தது என நீதிபதி ரோஹானா தமது தீர்ப்பில் கூறியிருந்தார்.

“2011ம் ஆண்டு ஜுலை 9 பேரணிக்கான இடம் குறித்து பெர்சே-க்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன,” என்றார் அவர்.

“முதலாவது விண்ணப்பதாரரான அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கு அகோங் பேட்டி அளித்துள்ளார். 2011 ஜுலை 9 பேரணிக்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.”

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நிகழ்வதற்கு அனுமதிக்கப் போவதாக ஹிஷாமுடின் விடுத்த பொது அறிக்கையையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.

அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து பெர்சே கூட்டணியையும் அதன் பங்கேற்பாளர்களையும் இழிவுபடுத்துவதை நிறுத்துமாறு அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்புக்கள் கேட்டுக் கொண்டன. அந்தத் தீர்ப்பு குறித்து கருத்துரைத்த ஹிஷாமுடின் சட்டத்துறைத் தலைவருடைய ஆலோசனையை நாடப் போவதாக மட்டும் கூறியிருந்தார்.

 

TAGS: