ஹூடூட் சட்டம் கொண்டுவந்தால் மசீச அம்னோவைவிட்டு விலகிச்செல்லும்

மசீச, தன் ஹூடுட்-எதிர்ப்பு நிலைப்பாட்டை  மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அம்னோ, இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்தால் நீண்டகாலத் தோழமைக் கட்சியான அதைவிட்டுப் பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அது தெரிவித்தது.

“அம்னோ ஹூடுட் சட்டத்தைக் கொண்டுவர முனைந்தால் மசீச அதற்கு உடந்தையாக இராது”, என்று கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் இன்று சுபாங் ஜெயாவில் கூறினார்.

‘உயர் வருமானம் பெறும் நாடு என்பதை நனவாக்குவோம்’ என்ற தேசிய கருத்தரங்கின் தொடக்க விழாவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் கலந்துகொண்ட சுவா, அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அம்னோவில் உள்ள மலாய்க்காரர்கள் ஹூடுட் சட்டத்தை ஏற்றுக்கொள்வதைத் தம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறிய சுவா, பாஸைப் போல் அல்லாமல் அம்னோ தலைவர்கள் எவரும் ஹூடுட் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை என்றும் அதைத் தான் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

“மசீச ஹூடுட்டை எதிர்க்கிறது என்பது திட்டவட்டம்”, என்றவர் வலியுறுத்தினார்.

நேற்று அம்னோ துணைத் தலைவரும் துணைப்பிரதமருமான முகைதின் யாசின், அம்னோ உறுப்பினர்கள் முஸ்லிம்கள் என்ற முறையில் ஹூடுட் சட்டத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும் பல-சமய நாடான மலேசியாவில் அதை நடைமுறைக்குக்கொண்டுவர இது தருணமல்ல என்று அறிவித்திருந்ததற்கு எதிர்வினையாக சுவா இவ்வாறு கூறினார்.