கட்டாயப்பாட பரிந்துரை- தமிழ்ப்பள்ளிகளை மூட சதித்திட்டமா?

தேசியப் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக வந்தால் அதுவே தமிழ்ப்பள்ளிகளை மூடும் சதித்திட்டமாக உருவாகும். “தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்” என்பது “நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கையில், இக் குழுவினர் முன்னெடுத்துள்ள கட்டாயப் பாடத் திட்டமானது மிகச் சரியானது போலவும்; மிகவும் நன்மையானது போலவும்; தமிழ்மொழியை உயர்த்திப் பிடிப்பது போலவும் தோன்றும்; ஆனால், இத் திட்டம் நடைமுறையானால் பேராபத்துகளும் பேரிழப்புகளும் உண்டாகும் என்கிறார் தமிழ்மொழிக்காக தொண்டாற்றும் சுப நற்குணன்.

அவரது கூற்றின்படி, தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென குறைந்து போகும் இதனால், தமிழ்ப்பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்படும். 523 தமிழ்ப்பள்ளிகள் படிப்படியாகக் குறைந்து போகும் எனவே, தமிழ்க்கல்வி என்னும் அடிப்படை உரிமை பறிபோய், தமிழ்மொழி ஒரு பாடமாக மட்டுமே இருக்கும்.

அவர் மேலும் கூறுகையில் அரசாங்கத் துறைத் தலைவர் (தலைமையாசிரியர்)  பதவிகள், ஆசிரியர், எல்லாம் இல்லாது போகும். தமிழ்ப்பள்ளிகளை நம்பியிருக்கும் அச்சுத்துறை, நூல் பதிப்புத் துறை, பயிற்றுத் துணைப் பொருள் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் முதலான பொருளியல் வாய்ப்புகள் தொலைந்து போகும். தமிழ்ப்பள்ளிக் கட்டடங்கள், நில உரிமங்கள், மண்டபங்கள், நிதி வளங்கள் அனைத்தும் கேட்பார் கொள்வாரின்றி நிலைகெட்டுப் போகும்.

இதனால், மலேசியாவில் தமிழ் மக்களின் வரலாற்றுச் சுவடுகள், வாழ்வியல் சுவடுகள் அனைத்தும் படிப்படியாக மறைந்துபோகும். வருங்காலத் தமிழ்ச் சமூகத்தின் மொழி, இன, சமய பண்பாட்டு, கூறுகள் அனைத்தும் சிதைந்து சின்னாபின்னமாகிப்போகும். இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகள் கழித்து தமிழுக்காகவும் தாய்மொழிக்காவும் தமிழ்ப்பள்ளிக்காகவும் தமிழ்க் கல்விக்காகவும் நமது குழந்தைகள் போராட வேண்டிய நெருக்கடி நிலைமை உருவாகும் அல்லது இவற்றைப் பற்றி ஒன்றுமே அறிந்திராத எதிலி இனமாக உருமாறும் என்ற அபாயச் சங்கொலியை எழுப்பியுள்ளார் நற்குணன்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம் என்றால், நாடு முழுவதும் செயல்படும் அரசாங்க பாலர் பள்ளிகளில் தமிழையும் ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும்,  இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தமிழைக் கட்டாயப் பாடமாக்கலாம், அரசாங்க வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் செய்யும் தமிழ் மாணவர்கள் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களில் கண்டிப்பாகச் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை போடலாம் என்ற மாற்று ஆலோசனைகளை வழங்குகிறார் நற்குணன். அத்தோடு தமிழ் மொழியை காக்க நாம் தான் மொழி உணர்வோடு செயல்பட வேண்டும் என்கிறார்.