அதிகாரத்துவ மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார், ஜாஞ்சி டெமாக்கரசி ( Janji Demokrasi ) ஏற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன் எற்பாட்டாளர்கள் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
“அவர்கள் தங்கள் நோக்கத்தைப் பற்றி டாங் வாங்கி ஒசிபிடி-யிடம் (போலீஸ் மாவட்டத் தலைவர்) தகவல் கொடுக்க வேண்டும். ஆகவே அவர்கள் அந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்ய வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமானது மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்கு அவர்கள் இடையூறு செய்யாமல் இருப்பதாகும்,” என இஸ்மாயில் குறிப்பிட்டார்.
“தங்கள் அரசியல் பிணைப்புக்கள் எப்படி இருந்தாலும் மெர்தேக்கா தினம் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு உரிய தினமாகும்.”
நாளை இரவு பல அரசு சாரா அமைப்புக்கள் டாத்தாரான் மெர்தேக்காவின் ஒரத்தில் ஒன்று கூடி தங்களது ஜாஞ்சி டெமாக்கரசி கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளன. அரசாங்கம் தேர்தல் சீர்திருத்தங்களுக்கான தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என நெருக்குதல் தொடுக்கும் பொருட்டு அதன் பங்கேற்பாளர்கள் மஞ்சள் உடை அணிந்திருப்பார்கள்.