அம்பாங் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: சாட்சியமளிக்க நிபந்தனை

கடந்த வாரம் அம்பாங் போலீசால் தங்கள் நண்பர் டி.தினேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதை நேரில் கண்ட இருவர், அந்த வட்டாரப் போலீசிடம் வாக்குமூலம் அளிக்க மறுக்கின்றனர்.

கே.மோசஸ்,ஒய்.இளவரசன்(இடம்)ஆகிய அவ்விருவரும் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த “சுயேச்சை விசாரணைக் குழுவிடம் மட்டுமே” சாட்சியமளிப்பார்கள் என வழக்குரைஞர் என்.சுரேந்திரன் கூறினார்.

“துப்பாக்கியால் சுட்டவர்கள் அம்பாங் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள்.விசாரணை அதிகாரிகளும் அதே நிலையத்தைச் சேர்ந்தவர்கள்”, என்றவர் கூறினார்.

ஆகஸ்ட் 21-இல் அம்பாங் வாட்டர்புரண்ட் அருகில், போக்குவரத்து விளக்குகள் உள்ள இடத்தில்  தினேஷ் சுடப்பட்டு இரண்டு நாள் கழித்து அம்பாங் மருத்துவமனையில் இறந்தார்.

அவரின் நண்பர்கள் இருவரும் அச்சம்பவம் பற்றி திங்கள்கிழமை ட்ரோபிகானா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அச்சம்பவம் தொடர்பில் போலீஸ் கூறியுள்ளதை மறுத்த அவர்கள், தம் காருக்கு முன்னே அடையாளமிடப்படாத கார்கள் வந்து குறுக்கிட்டபோது தினேஷ் காரிலிருந்து இறங்கினார் என்றும் அப்போது அவர் கையில் எதுவும் வைத்திருக்கவில்லை என்றும்  தெரிவித்தனர்.

தங்கள் நண்பர் “காரை நோக்கித் திரும்ப ஓடியபோது” சாதாரண உடைகளில் இருந்த போலீஸ்காரர்களால் சுடப்பட்டார் என்றும் சுட்டவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

சுடுவதற்குமுன் போலீஸ் “எச்சரிக்கை விடுக்கவில்லை என்றும் குறைந்தது 10சுற்றுக்களாவது சுட்டார்கள் என்றும் “கண்மூடித்தனமாக” சுட்டனர் என்றும் “கொல்வதற்காகவே” சுட்டதுபோல் இருந்தது என்றும் குறிப்பிட்டனர்.

தோட்டாக்கள் உடலுக்குள் புகுந்து வெளியேறின

ஆகஸ்ட் 23-இல் கோலாலம்பூர் மருத்துவமனையில் சவப் பரிசோதனை நடத்திய டாக்டர் நோர்லிசா அப்துல்லா, தோட்டாக்கள் அனைத்துமே தினேஷின் உடலுக்குள் சென்று வெளியேறிவிட்டதாக தெரிவித்தார் என சுரேந்திரன் கூறினார். 

பிகேஆர் உதவித் தலைவருமான சுரேந்திரன்,  ஒரு மாத காலத்தில் சவப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

மலாய்மொழி செய்தித்தாள்களான கோஸ்மோ!-வும் ஹரியான் மெட்ரோ-வும் 14கார்களில் சென்ற ‘விவா நந்தா’ குண்டர் கும்பலில் தினேஷும் ஒருவர் என்று போலீஸ் கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தன.

அவர்கள் பாண்டான் பெர்மாயில். ஆகஸ்ட் 21-இல் நடந்த ஒரு சண்டையைத் தொடர்வதற்காகச் சென்றார்களாம்.

தினேஷ் பயணம் செய்த காரின் ஓட்டுனர், போலீஸ் காரைப் பின்பக்கமாக நகர்ந்து மோதப் பார்த்தார் என்றும் அதே வேளை அதில் பயணம் செய்த மற்றவர்கள் பாராங் கத்திகளுடன் இறங்கி வந்து போலீஸ் காரின் கண்ணாடிகளை நொறுக்கினர் என்றும் போலீஸ் கூறியது.