மாஜு கல்வி மேம்பாட்டுக் கழக(எம்ஐஇடி) முன்னாள் தலைமை செயல் அதிகாரி பி.சித்ரகலா மஇகா முன்னாள் தலைவருக்கும் மேலும் இருவருக்கும் எதிரான அவதூறு வழக்குகளைப் பேசித் தீர்த்துக்கொள்வது பற்றி ஆலோசித்து வருகிறார்.
தம் கட்சிக்காரர் நீதிமன்றத்துக்கு வெளியில் விவகாரத்துக்குத் தீர்வுகாண விரும்புவதாக அவரின் வழக்குரைஞர் பிரகாஷ் லட்சுமணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
“இதன் தொடர்பில் மேலதிக உத்தரவுகளைப் பெற அடுத்த வாரம் அவரை(சித்ரகலா)ச் சந்திப்பேன்”, என்றாரவர்.
அக்டோபர் 21-இவ் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்ற உயர்நிலை உதவிப் பதிவதிகாரி, அஹ்மட் கைருல் பார்ஹு யூசுப் நாள் குறித்திருக்கிறார் என்று பிரகாஷ் இன்று கூறினார்.
2009, நவம்பர் 4 இல், சித்ரகலாவும் அவரின் கணவர் கே.வாசுவும் சாமிவேலு, அவரின் துணைவியார் ஆர்.இந்திராணி ஆகியோருக்கு எதிராகவும் தமிழ் நாளிதழான தமிழ் நேசனுக்கு எதிராகவும் மூன்று வழக்குகளைப் பதிவு செய்தனர்.
முதல் வழக்கு சாமிவேலுவுக்கு எதிரானது. அதில் சாமிவேலு 2009 மார்ச் 8-இல் எம்ஐஇடி காப்புறுதி தொடர்பில் தங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் அது தமிழ் நேசன், மக்கள் ஓசை, மலேசிய நண்பன் ஆகிய மூன்று நாளேடுகளிலும் வெளிவந்தது என்றும் சித்ராகலாவும் அவரின் கணவரும் கூறியுள்ளனர்.
அவரது கூற்று தாமும் தம் கணவரும் மஇகாவின் கல்விக்கரமான எம்ஐஇடி-யை ஏமாற்றத் திட்டமிட்டிருந்ததாக பொருள்படும் வகையில் அமைந்திருந்தது என்று சித்ரகலா கூறினார்.
இரண்டாவது வழக்கு இந்திராணிக்கு எதிரானது. அதில் இந்திராணி, இணையச் செய்தித்தளமான மலேசியாகினிக்கு அக்டோபர் முதல் நாளில் அளித்த நேர்காணலில் தம்மைச் சிறுமைப்படுத்தும் வகையில் பேசியிருந்தார் என்றும் அந்த நேர்காணல் அக்டோபர் 3 மக்கள் ஓசையில் முழுமையாக இடம்பெற்றிருந்தது என்றும் சித்ரகலா கூறியுள்ளார்.
மூன்றாவது வழக்கு தமிழ் நேசனுக்கும் அதன் தலைமை ஆசிரியர் கே.பத்மநாதனுக்கும் எதிரானது. அதில் சித்ரகலா, அக்டோபர் 1-இல் தமிழ் நேசனில் தம்மை அவமதிக்கும் வகையில் செய்திகள் வெளியிட்டிருந்தார்கள் என்று கூறியுள்ளார்.
பொது இழப்பீடும் குறிப்பான இழப்பீடும் கோரி அவர் இம்மூன்று வழக்குகளையும் தொடுத்துள்ளார்.