கோலாலம்பூர் டாத்தாரான் மெர்தேக்காவில் நிகழும் 55வது மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வரும் பொது மக்கள் மஞ்சள் உடையை அணிந்திருப்பதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார்.
“மஞ்சள் அல்லது சிவப்பு அன்றைய தினம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எல்லா மக்களும் கலந்து கொள்ளலாம். முதலில் வருகின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,” என ஜாஞ்சி டெமாக்கரசி பற்றி வினவப்பட்ட போது அவர் உத்துசான் மலேசியாவிடம் தெரிவித்தார்.
“நாங்கள் அந்த இடத்தை பிஎன் மக்களுக்கோ அல்லது மற்ற அமைப்புக்களைச் சார்ந்தவர்களுக்கோ ஒதுக்கவில்லை. பிகேஆர் மக்கள் வர விரும்பினால் நாங்கள் அவர்களை உண்மையிலேயே வரவேற்கிறோம். ஆனால் வெறுப்பைத் தருகின்ற வேலைகளைச் செய்ய வேண்டாம். குழல் இசைக் கருவிகளை ஊத வேண்டாம், ஆபாசமான மொழியைப் பயன்படுத்த வேண்டாம். கட்சி வேறுபாடு எதுவாக இருந்தாலும் ஒற்றுமையை நேசிக்கும் குடி மக்களாக வாருங்கள்.”
“கூட்டத்துக்குள் இணைந்து வருமாறு நாங்கள் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். அவர்கள் மஞ்சள் உடையை அணிய விரும்பினால் அணிந்து கொள்ளுங்கள். எங்கள் ஊர்வலத்தில் மஞ்சள் உடைகளை அணிந்தவர்களும் இருக்கின்றனர். அந்த மஞ்சள் நிறம் நமக்குச் சொந்தமானது, எந்த நேரத்திலும் நாம் அதனை அணியலாம். அது பிகேஆர் கட்சிக்கோ, பாஸ் கட்சிக்கோ அல்லது டிஏபிக்கோ சொந்தமானது அல்ல.”
“டாத்தாரான் மெர்தேக்காவிலும் புக்கிட் ஜலில் தேசிய அரங்கத்திலும் நிலைமை எப்படி மாறுகிறது என்பதை நாம் பார்ப்போம்.”
மெர்தேக்கா தின ஏற்பாட்டுக் குழுவுக்கு தாம் தலைமை ஏற்றுள்ள 10 ஆண்டுகளில் இந்த முறை தான் எதிர்க்கட்சிகள் நாட்டின் சுதந்திரத்தை தங்கள் அரசியல் நலனுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன என ராயிஸ் வலியுறுத்தினார்.
தூய்மையான நியாயமான தேர்தல்கள் உட்பட தனது வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இரவு 10 மணியிலிருந்து நள்ளிரவு வரையில் ஜாஞ்சி டெமாக்காரசி என்னும் நிகழ்வை நடத்துவதற்கு 47 அரசு சாரா அமைப்புக்களை கொண்ட ‘Gabungan Janji’ கூட்டணி எண்ணியுள்ளது.
அன்றிரவு மஞ்சள் உடையில் வருமாறு பங்கேற்பாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
என்றாலும் வெள்ளிக் கிழமையன்று அதிகாரத்துவக் கொண்டாட்டங்களுக்காக அமைக்கப்பட்ட பொது ஒலிபெருக்கி வசதிகளுக்கு ஜாஞ்சி டெமாக்காரசி பேரணி இடையூறு செய்யக் கூடும் என்பதால் அதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் எனப் போலீசாரைக் கேட்டுக் கொள்ளும் அறிக்கை ஒன்றை அமைச்சின் தலைமைச் செயலாளர் கமாருதின் சியாராப் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.