1950ம் ஆண்டுக்கான ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவை வெளிப்படையாக எதிர்த்ததற்காக மூன்று முக்கிய பிஎன் தலைவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது.
உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா, இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் கான் பிங் சியூ, அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் ஆகியோரே அந்த மூவரும் ஆவர்.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி துணைப் பிரதமர் முஹைடின் யாசின் தலைமையில் நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.
“அந்த இரண்டு துணை அமைச்சர்களுடைய நடவடிக்கையும் அரசாங்க நிலைக்கு எதிரானது என்பதால் பிரதமர் அல்லது துணைப் பிரதமர் அவர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று கூட யோசனை தெரிவிக்கப்பட்டது.”
“அந்த இரண்டு துணை அமைச்சர்களையும் கைரியையும் பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை செவிமடுப்பதோடு அரசாங்க விளக்கத்தையும் அளிக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது,” என ஒரு வட்டாரம் குறிப்பிட்டது.
அந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஒரு நாள் முன்னதாக ‘இணைய இருட்டடிப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டதைத் தொடர்ந்து 114ஏ பிரிவு மீது எழுந்துள்ள சர்ச்சையை விவாதிக்குமாறு அப்போது வெளிநாட்டில் இருந்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அமைச்சரவைக்குப் பணித்தார்.
ஆனால் அந்தத் திருத்தத்தை மறு ஆய்வு செய்வதில்லை என அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது. அந்த முடிவை பின்னர் நஸ்ரியும் உறுதிப்படுத்தினார்.
அந்தத் திருத்தத்தை வெளிப்படையாக எதிர்த்த மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் அரசாங்கம் மீதான நம்பகத்தன்மை குறைந்து நிர்வாகம் பல்வீனமாகி விடும் என்றும் அமைச்சரவை கருதியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
“அரசாங்கக் கொள்கைகளுக்கு முரணான அறிக்கைகளை அந்த மூவரும் வெளிப்படையாக வெளியிட்டு வந்ததையும் அமைச்சரவை கவனத்தில் எடுத்துக் கொண்டது.”
“அவர்கள் தங்கள் மனக்குறைகளை தங்கள் அமைச்சர்கள் அல்லது அரசியல் கட்சிகள் போன்ற உள் வழிகளில் தெரிவித்திருக்க வேண்டும்.”
இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் ஹுசேன் காலம் தொட்டு நிர்வாகத்தை மீறும் உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்துள்ளதையும் நடப்பு நிர்வாகத்தில் அவ்வாறு செய்யப்படுவதில்லை என்பதையும் அமைச்சரவை சுட்டிக்காட்டியதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
‘இன்னும் தெரிவிக்கப்படவில்லை’
அமைச்சரவை முடிவு பற்றி தங்களுக்கு இது வரை தெரிவிக்கப்படவில்லை என தொடர்பு கொள்ளப்பட்ட போது கைரியும் சைபுதினும் கூறினர்
“இன்னும் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே எந்தக் கருத்தும் இல்லை,” என சைபுதின் சொன்னார்.
அந்தத் திருத்தம் பற்றிய தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக தாம் நஸ்ரியையும் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லையும் சந்திக்கப் போவதாக கைரி தெரிவித்தார்.
கான், நஸ்ரி, கனி ஆகியோர் கருத்துத் தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இன்னும் பதில் அளிக்கவில்லை.