‘மெர்தேக்கா வரவேற்பு நிகழ்வுகளுக்கு அனுமதி தேவையா ?’

டாத்தாரான் மெர்தேக்காவில் இன்றிரவு கூடுவதின் மூலம் தாங்கள் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மீறப் போவதாக கூறப்படுவதை ஜாஞ்சி டெமாக்கரசி ஏற்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவதாக தான் அளித்துள்ள வாக்குறுதியை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்தக் கூட்டத்திற்குப் பின்னணியில் உள்ள 47 அரசு சாரா அமைப்புக்களைச் சேர்ந்த மலேசியர்களுக்கு நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் பொருட்டு ஒன்று கூடுவதற்கு எல்லா உரிமைகளையும் பெற்றுள்ளனர்.

டாத்தாரான் மெர்தேக்காவில் அதிகாரத்துவக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கு தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் விடுத்த அழைப்பை தாங்கள் வரவேற்பதாகவும் ஜாஞ்சி டெமாக்கரசி ஏற்பாட்டாளர்கள் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

“என்றாலும் Gabungan Janji அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மீறுகிறது என தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) இஸ்மாயில் ஒமாரும் டாங் வாங்கி போலீஸ் மாவட்ட அதிகாரியும் (ஒசிபிடி) தொடர்ந்து கூறி வருவது எங்களுக்கு புரியவில்லை.”

“மெர்தேக்காவை வரவேற்கும் கொண்டாட்டங்களில் பங்கு கொள்வதற்கும் ஒன்று கூடுவதற்கு ஒவ்வொரு மலேசியருக்கு உரிமை உண்டு என நாங்கள் கருதுகிறோம்.”

“நாங்கள் அந்த வரவேற்பு நிகழ்வுகளுக்கும் மெர்தேக்கா கொண்டாட்டங்களுக்கும் இடையூறு செய்ய மாட்டோம். ஆனால் மெர்தேக்காவைக் கொண்டாடுவதில் எல்லா மலேசியர்களுடனும் நாங்கள் இணைந்து கொள்வோம்,” என ஜாஞ்சி டெமாக்கரசி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

இன்றிரவு அந்த நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றவர்கள் மஞ்சள் உடையில் செல்ல வேண்டும் என Gabungan Janji கேட்டுக் கொள்கிறது. தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் பெர்சே அமைப்பின் அடையாளம் மஞ்சள் ஆகும்.

டாத்தாரானில் ஒன்று கூடுவதற்கான நேரம் இரவு 11 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் Gabungan Janji தெரிவித்தது.

ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டபடி தங்கள் கூட்டத்தை நடத்த விரும்பினால் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் “தங்கள் எண்ணத்தை முதலில் டாங் வாங்கி ஒசிபிடி-யிடம் தெரிவிக்க வேண்டும் அல்லது முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும்” என இஸ்மாயில் நேற்று கூறியிருந்தார்.

ஆனால் ஐஜிபி எடுத்துள்ள நிலைக்கு எதிர்மாறாக “கூட்டமாக வருமாறு நாங்கள் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். அவர்கள் மஞ்சள் உடை அணிய விரும்பினால் அணியலாம்,” என்று ராயிஸ் கூறியுள்ளார்.

 

TAGS: