Janji Demokrasi பேரணி சட்டவிரோதமானது: போலீஸ் அறிவிப்பு

இன்றிரவு நடைபெறவுள்ள Janji Demokrasi பேரணி விதிமுறைகளுக்கு எதிரானது என்று போலீஸ் அறிவித்துள்ளது.

ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் மரியா சின்-னைத் தொடர்புகொண்டபோது அவர் இதை உறுதிப்படுத்தினார். டாங் வாங்கி வட்டார போலீஸ் தலைவர் சைனுடின் அஹ்மட் அனுப்பிய கடிதம் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகத்தான் வந்து கிடைத்ததாக அவர் சொன்னார்.

“பிற்பகல் 2.15க்குத்தான் கடிதம் கொடுக்கப்பட்டது.சில போலீஸ்காரர்கள் கொண்டு வந்தார்கள்”, என்றவர் மலேசியாகினியிடம் கூறினார்.

ஆனால், கடிதத்தைப்  பற்றிக் கவலைப்படாமல் 47 என்ஜிஓ-கள் அடங்கிய ஜஞ்சி கூட்டணி திட்டப்படி டாட்டாரான் மெர்டேகா செல்லும் என்றாரவர்.

பேரணி பங்கேற்பாளர்கள் டாட்டாரான் மெர்டேகாவுக்குச் செல்ல முடியாதபடி தடுக்கப்பட்டால், “அவர்கள் இருக்கும் இடத்திலேயே கொண்டாடுமாறு” கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என்றவர் சொன்னார்.

“இது மெர்டேகா கொண்டாட்டம்தானே. நகரில் எந்த இடத்திலும் கொண்டாடலாம்.எல்லாரும் மஞ்சள் உடை அணிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

“நாங்கள் மெர்டேகாவைக் கொண்டாடத்தான் விரும்புகிறோம்.போலீஸ்தான் விட மாட்டேன் என்கிறார்கள்”.

ஏற்பாட்டாளர்கள் முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லை என்பதுடன் டாட்டாரான் மெர்டேகாவின் உரிமையாளர்களான கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தின் அனுமதியும் பெறப்படவில்லை என்பதால் பேரணி சட்டவிரோதமாகிறது என்று அக்கடிதம் குறிப்பிட்டது.

பொதுப்பேரணிச் சட்டம்  2012 பகுதி 9(1), பகுதி 11 ஆகியவற்றின்படி இவ்விரு நிபந்தனைகளையும் நிறைவு செய்வது அவசியமாகும்.

மேலும், அப்பேரணி நாளைக் காலை நடைபெறும் மெர்டேகா தினக் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கும் இடையூறாக இருக்கும் என சைனுடின் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பங்கேற்பாளர்கள் செய்யத்தக்கதும் செய்யத்தகாததும்

ஆனால், பேரணி அதிகாரப்பூர்வ மெர்டேகா கொண்டாட்டத்துக்கு இடையூறாக இருக்கும் என்று கூறப்படுவதை மரியா மறுத்தார்.

“மெர்டேகா கொண்டாட்டத்துக்கு இடையூறு செய்வதற்காக நாங்கள் அங்கு செல்லவில்லை.அதனால்தான் நீருற்று அமைந்துள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தோம்.அது கொண்டாட்டம் நடைபெறும் இடத்துக்கு வெகு  தொலைவில் உள்ளது”, என்றாரவர்.

அக்கடிதம் கிடைக்கப்பெற்றதை அடுத்து ஜஞ்சி கூட்டணி அதன் முகநூல் பக்கத்தில் பங்கேற்பாளர்கள் செய்யத்தக்கதும் செய்யத்தகாததும் என ஒரு பட்டியல் போட்டுள்ளது.

அதில், பதாகைகள் அல்லது அறிவிப்பு அட்டைகள் கூடாது; சினமூட்டும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது; ஒலிபெருக்கிகள் கூடாது;ஆர்டிஎம் ஒலிபரப்புக் கருவிகள் அருகில் செல்லக்கூடாது; ஏற்பாட்டாளர்கள் சொல்வதுபோல் நடந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தூய்மையான, நியாயமான தேர்தல்கள் நடத்துவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதை நினைவுப்படுத்தவே இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டாட்டாரான் மெர்டேகாவின் வடக்கு மூலையில் இன்றிரவு 10 மணிக்கு அது நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு இரவு 11மணிக்கு அது தள்ளி வைக்கப்பட்டது.

அதற்கு அருகிலேயே அதிகாரப்பூர்வமான மெர்டேகா கவுண்ட்டவுன் நிகழ்வும் நடைபெறுகிறது. நாளைக் காலை அதே இடத்தில் மெர்டேகா தின அணிவகுப்பு நடைபெறும்.

இதனிடையே, மலேசியாகினியிடம் பேசிய ஜாலான் சுல்தான், ஜாலான் புக்கிட் பிந்தாங் பாதுகாப்புக் குழுத் தலைவர் ஸ்டேன்லி யோங், மாலை  4மணிவரை போலீசிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை என்பதால் தங்கள் நிகழ்ச்சிகள் திட்டப்படி நடைபெறும் என்றார்.

எம்ஆர்டி கட்டுமான வேலைகளால், அச்சாலைகள் பாதிக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த அக்குழு, இன்றிரவு 8.30க்கு ஜாலான் சுல்தானுக்கு அருகில் உள்ள கோஸ்பல் ஹால் தேவாலயத்திலிருந்து பழைய கிள்ளான் பஸ் நிலையம்வரை ஊர்வலம் செல்லத் திட்டமிட்டுள்ளது.