டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தமக்கு எதிராக நடைபெற்று வரும் தேச நிந்தனை வழக்கில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு சபீனா அனுப்ப வேண்டும் என சமர்பித்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அபு தாலிப் ஒஸ்மான், அவரை அடுத்து அந்தப் பதவியை ஏற்ற அப்துல் கனி பட்டெய்ல் ஆகியோருக்கு சபீனா அனுப்ப கர்பால் கொடுத்த விண்ணப்பத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
“முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் கமாலுதின் முகமட் சைட்-டுக்கு மட்டுமே சபீனா வெளியிடப்பட முடியும்,” என நீதிபதி அஸ்மான் அப்துல்லா கூறினார்.
பிரதிவாதியின் வழக்கிற்கு ஆதரவாக கமாலுதினுக்கு சபீனா வெளியிடப்பட முடியும். ஏனெனில் பேராக் சுல்தானுக்கு எதிராக சிவில் வழக்குத் தொடர முடியும் என கமாலுதின் கருத்துத் தெரிவித்துள்ளார் என அஸ்மான் எழுத்துப்பூர்வமான தீர்ப்பில் கூறினார்.
கூட்டரசு அரசமைப்பின் 145(3)வது பிரிவு “எந்த ஒரு கிரிமினல் நடவடிக்கையைத் தொடங்குவதற்கும் நிறுத்துவதற்கும்” சட்டத்துறைத் தலைவருக்கு அதிகாரம் அளித்துள்ளதால் அவரது சாட்சியம் அவசியம் இல்லை என நீதிபதி சொன்னார்.
அதே வேளையில் மகாதீர் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைகளுக்காக ஏன் அவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் கர்பால் விடுத்த அறிக்கைகளுடன் மகாதீர் அறிக்கைகளை ஒப்பிட வேண்டிய தேவை இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்வதற்குக் கர்பால் மேற்கொண்ட முயற்சியையும் நீதிபதி தமது இன்றைய முடிவுகளின் அடிப்படையில் நிராகரித்தார்.