கூட்டரசு அரசாங்கம் தேசிய நாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ள தேசிய அரங்கத்தில் பொது மக்களுக்கு இருக்கைகள் கிடைக்குமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
என்றாலும் அந்த மாபெரும் நிகழ்ச்சியை ஒட்டி அதிர்ஷ்ட குலுக்கு நிச்சயம் நடத்தப்படும் என உறுதியாகத் தெரிகிறது.
அந்தக் குலுக்கில் வெற்றி பெறுகின்றவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் காத்திருக்கின்றன. அதனை வெல்வதற்கான வாய்ப்பை பெறுவதற்கு ஒருவர் உள்ளூர் தகவல் துறை கிளையிடமிருந்து சிவப்புக் கார்டுகளை பெற்றால் போதும்.
அந்த விவரங்கள், முக நூலில் உள்ள Janji Ditepati பக்கத்தில் 55 ஆண்டுகள் மெர்தேக்கா என்ற பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்த இணையத்தளம் உண்மையானது என்பதை தொடர்பு கொள்ளப்பட்ட போது தகவல் அமைச்சின் பொது உறவுத் துறை பேச்சாளர் ஜாஸ்மினாவாத்தி ஜாமின் உறுதிப்படுத்தினார்.
புரோட்டோன் தயாரிக்கும் கார்களில் பெருமைக்குரியது எனக் கருதப்படும் பிரிவ் முதலாவது பரிசு என அந்த முக நூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொடனாஸ் ரக மோட்டார் சைக்கிள்கள் நான்கு பரிசுப் பொருட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் வினோதமாக மற்ற பரிசுகள் தேசிய அடையாளத் தன்மையைக் கொண்டிருக்கவில்லை.
அவற்றுள் Chevrolet Cruze, வெஸ்பா ஸ்கூட்டர், 50 ஹுவாய் ரக கணினிகள், 10 பிக்ஸி ரக சைக்கிள்கள், மூன்று பிளாக் பெரி கைப் பேசிகள் ஆகியவையும் அடங்கும்.
இருவர் லண்டனுக்குச் சென்று வருவதற்கான இன்னொரு பரிசும் வெற்றியாளர்களுக்குக் காத்திருக்கிறது. லண்டன், 55 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயா சுதந்தரம் பெற்ற இங்கிலாந்தின் தலைநகரமாகும்.