போலீஸ், ஜஞ்சி டெமாக்கரசி ஏற்பாட்டாளர்களை விசாரிக்கிறது

கோலாலம்பூர் டாத்தாரான் மெர்தேக்காவில் நேற்றிரவு 10,000 மக்களைக் கவர்ந்த ஜஞ்சி டெமாக்கரசி (Janji Demokrasi) பேரணி ஏற்பாட்டாளர்களை போலீஸ் விசாரிக்கிறது.

அதனை உறுதிப்படுத்திய கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கூ சின் வா, 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் அந்த புலானய்வு நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

“நாங்கள் அவர்களை அந்தச் சட்டத்தின் கீழ் தொடர்ந்து விசாரிப்போம்,” என மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கவிதை ஒன்றை வாசித்ததின் மூலம் பெர்சே இணைத் தலைவர் ஏ சாமாட் சைட் அந்தச் சட்டத்தை மீறியுள்ளரா என்பதை போலீஸ் பின்னர் விசாரிக்கும் என நேற்றிரவு டாங் வாங்கி ஒசிபிடி ஜைனுடின் அகமட் கூறியிருந்தார்.

தேசிய இலக்கியவாதியான சாமாட் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற தலைமையகத்துக்கு வெளியில் இருந்த சதுக்கத்தில்  ‘Janji Demokrasi’ என்னும் தலைப்பிலான கவிதையை வாசித்தார்.

அந்த இடம் டாத்தாரான் மெர்தேக்காவிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பெரும் எண்ணிக்கையில் கைது இல்லை

அந்தப் பேரணி சட்ட விரோதமானது என கடைசி நேரத்தில் பிரகடனம் செய்யப்பட்ட போதிலும் தேசிய நாளுக்கு முதல் நாள் மஞ்சள் உடையில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடினர். பெரும் எண்ணிக்கையில் கைது நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படவில்லை.

என்றாலும் வாண வேடிக்கைகளை ஏற்றியதாக  கூறப்பட்ட இருவரைப் போலீஸார் தடுத்து வைத்தனர்.

அந்தப் பேரணி சட்டவிரோதமானது எனத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை ஜாஞ்சி டெமாக்கரசி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் மரியா சின் அப்துல்லாவுக்கு நேற்று பிற்பகல் மணி 2.15க்குப் போலீசார் அனுப்பி வைத்தனர்.

பேரணி குறித்து போலீசாருக்கு முன் கூட்டியே அறிவிப்புக் கொடுக்க ஏற்பாட்டாளர்கள் தவறி விட்டதும் அந்த இடத்தின் உரிமையாளரான கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்திடமிருந்து அனுமதி பெறத் தவறி விட்டதும் அதற்கான காரணங்கள் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் 9(1) பிரிவு, 11வது பிரிவு ஆகியவற்றின் கீழ் அந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் தூய்மையான நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை அதற்கு நினைவூட்டுவதே பேரணியின் நோக்கமாகும்.

பிஎன் தேர்தல் பிரச்சார சுலோகமுமான ‘Janji Ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன) தேசிய நாள் கொண்டாட்டங்களுக்கான அரசாங்கத்தின் அதிகாரத்துவ சுலோகத்தின் பாணியில் ஜாஞ்சி டெமாக்கரசி பெயரும் உருவாக்கப்பட்டது.

பாக் சாமாட் மீதான விசாரணை  ‘தன்மூப்பானது’

இதனிடையே அமைதியாக நடந்த ஜஞ்சி டெமாக்கரசி பேரணி ஏற்பாட்டாளர்கள் மீதும் சாமாட் மீதும் தொடங்கியுள்ள அனைத்து கிரிமினல் நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்ளுமாறு பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் உடனடியாக கேட்டுக் கொண்டுள்ளார்.

“நமது தேசிய இலக்கியவாதிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு போலீஸ் செய்துள்ள முடிவு தன்மூப்பானது, அரசமைப்புக்கு முரணானது, போலீஸ் அதிகாரங்கள் அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகும்.”

“பொது இடத்தில் கவிதையை வாசித்த சாமாட் சைட் உண்மையில் கூட்டரசு அரசமைப்பின் 10வது பிரிவில் கூறப்பட்டுள்ள ஒன்று கூடுவதற்கும் பேச்சு சுதந்திரத்துக்கும் உள்ள தமது அடிப்படை உரிமையைப் பயன்படுத்தியுள்ளார்,” என்றார் அவர்.

ஆளும் கூட்டணியை சாமாட் தொடர்ந்து பகிரங்கமாக குறை கூறி வந்ததால் அவர் குறி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுரேந்திரன் கூறிக் கொண்டார்.

அரசியல் எதிர்ப்பை ஒடுக்கவும் சிவில் சமூகத்தை அச்சுறுத்தவும் போலீஸ் படை பயன்படுத்தப்படுகின்றது என்றார் அவர்.

“அந்த புலனாய்வு தெளிவாக அரசியல் நோக்கமுடையது, கூட்டரசு அரசமைப்பின் 10வது பிரிவில் உள்ள மக்கள் அடிப்படை உரிமைகளை மீறுகிறது,” என்றும் அந்த வழக்குரைஞர் தெரிவித்தார்.