Sang Saka Malaya கொடியை பறக்க விட்ட இருவரை அன்வார் ஆதரிக்கிறார்

மெர்தேக்காவுக்கு முதல் நாள் கொண்டாட்டங்களின் போது Sang Saka Malaya கொடியைப் பிடித்திருந்த இளைஞர்களை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆதரித்துள்ளார்.

அந்தக் கொடியை அவர்கள் பறக்க விட்டதில் எந்தத் தவறும் இல்லை. காரணம் மக்கள் மலாயாவுக்கு சுதந்திரம் கோரிய போது அந்தக் கொடி முன்மொழியப்பட்டது என அன்வார் சொன்னார்.

“அந்த கால கட்டம் நாட்டின் வரலாறு. அந்தக் கொடி பயன்படுத்தப்பட்டது. தேசியக் கொடியான ஜாலுர் கெமிலாங்கை மாற்ற அந்த இளைஞர்கள் எண்ணியதாக நான் கருதவில்லை. நாட்டு வரலாற்றில் ஒர் அம்சத்தை எடுத்துக்காட்டவே அவர்கள் அதனைச் செய்திருக்க வேண்டும்.”

அன்வார் எடுத்துக் காட்டுக்கு பாஸ் கட்சிக் கொடியை சுட்டிக் காட்டினார். கடந்த காலத்தில் அந்தக் கட்சி பிறையையும் நட்சத்திரத்தையும் கொண்ட கொடியை வைத்திருந்தது என அவர் சொன்னார்.

தேசியக் கொடியைப் போன்று அது இருப்பதாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது பாஸ் அதனை முழு நிலவாக மாற்றியது.

“பாஸ் கட்சி தனது பழைய கொடியை ஏற்றுவதில் எந்தத் தவறும் இல்லை என நான் கருதுகிறேன். ஏனெனில் அது நாட்டு வரலாற்றிலும் கட்சியின் வரலாற்றிலும் ஒர் அம்சமாகும்.

“அம்னோ கொடி கூட Sang Saka Bangsa என அழைக்கப்பட்டது” என அவர் குறிப்பிட்டார்.

பிறையையும் நட்சத்திரத்தையும் கொண்ட சிவப்பு, வெள்ளை நிறக் கொடியைப் பிடித்திருந்த பல இளைஞர்கள் மீது குறை கூறப்படுவது பற்றி அந்த பெர்மாத்தாங் எம்பி கருத்துரைத்தார்.

அந்தக் கொடிக்கு வலைப்பதிவு ஒன்றில் செரிகாலா செலத்தான் என்ற அந்த வலைப்பதிவாளர் பொறுப்பேற்றுள்ளார்.

“டாத்தாரான் மெர்தேக்காவில் மெர்தேக்கா கொண்டாட்டங்கள் நிகழ்ந்த போது Sang Saka Malaya  கொடியை பறக்க விட்டதற்கு நானும் ஜைரி ஷாபாயுமே பொறுப்பு.” என அவர் சொன்னார்.

“ஜாலுர் கெமிலாங்கை (தேசியக் கொடி) Sang Saka Malaya-வுக்கு மாற்றுவது எங்கள் நோக்கமல்ல.  உண்மையில் Sang Saka Malaya கொடி தான் ஜாலுர் கெமிலாங்-காக மாற்றப்பட்டது,” என்றார் அவர்.

தம்மைப் பட்டப்படிப்பு மாணவர் என அடையாளம் காட்டிக் கொண்ட அவர் அதிகாரத்துவ வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டு விட்ட சுதந்திரத்துக்கான மலாய் இடச்சாரிகளின் போராட்டத்தை கௌரவிக்கும் பொருட்டு “ஜாலுர் கெமிலாங் உடன்” அந்தக் கொடியையும் பறக்க விட விரும்பியதாக தெரிவித்தார்.

பள்ளிவாசல் தாக்குதல் நியாயமற்றது என கிராமவாசிகள் கருதினர்

நேற்றிரவு அலோர் ஸ்டார் பாக்கார் பாக்காவில் பள்ளிவாசல் ஒன்றில் தமக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் பற்றியும் அன்வார் கருத்துரைத்தார்.

“அது தேவையில்லாதது என்றும் பெர்க்காசா இளைஞர்கள் அதனை செய்திருக்கக் கூடாது என்றும் கிராமவாசிகளும் இமாமும் கருதினர்,” என்றார் அவர்.

“அவர்கள் பெர்க்காசா சட்டைகளை அணிந்திருந்தால் அவர்கள் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்குத் தெரிய வந்தது.”

TAGS: