ஜொகூரில் “முகைதின் பிரதமராக வேண்டும்” என்று கூறும் சுவரொட்டிகள்

13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் துணைப் பிரதமர் முகைதின் யாசின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள ஆதரவு தெரிவிக்கும் மர்மமான சுவரொட்டிகள் ஜொகூரில் விநியோகிக்கப்பட்டன.

ஆனால், அச்சுவரொட்டிகளை கட்சி வெளியிடவில்லை என்று ஜொகூர் அம்னோ கூறிக்கொண்டதோடு அவ்விவகாரம் குறித்து போலீஸ் புகார் ஒன்றையும் செய்துள்ளது.

அச்சுவரொட்டிகளில் முகைதினின் படமும் மலேசிய கொடியும் காணப்படுகின்றன. அப்படம் இணையதளங்களில் பரவலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

“டான் ஸ்ரீ முகைதின் யாசின் 13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் பிரதமர் ஆவதை விரும்புகிறோம்” (“Kami Mahu Tan Sri Muhyiddin Yassin Sebagai PM Sebelum PRU 13”) என்ற வாசகம் அச்சுவரொட்டில் காணப்படுகிறது.

போலீஸ் புகார்

நேற்று, ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு ஜொகூர் பாருவிலும் கூலாய்ஜெயாவிலும் இது குறித்த போலீஸ் புகாரை செய்தது. பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இது தேசியத் தலைவர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும் என்று அது கூறியது.