கடந்த மாதம் 26-வயது தினேஷ் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரிக்க ஒரு புதிய போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டதை அடுத்து போலீசார் அக்குழுவை அமைத்துள்ளதாக லத்திபா கோயா கூறினார்.அவர் சம்பவத்தை நேரில் பார்த்த இருவரைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞராவார்.
“அவ்விவகாரத்தை சிலாங்கூர் போலீஸ் தலைமையகம், ஏஎஸ்பி பொர்ஹான் என்பாரின் தலைமையில் விசாரித்து வருகிறது”,என்றவர் நேற்றுச் சொன்னார்.
சாட்சிகளான ஒய்.இளவரசனும் கே.மோசஸும் இறந்த ஆடவரின் தந்தையாரான தர்மசேனாவும் திங்கள்கிழமை போலீசில் வாக்குமூலம் அளித்ததாக லத்திபா தெரிவித்தார்.
இதற்குமுன் இளவரசனும் மோசஸும் வாக்குமூலம் அளிக்க மறுத்து வந்தனர். துப்பாக்கியால் சுட்டவர்கள் பணிபுரியும் அதே போலிஸ் நிலையமே விசாரணையை மேற்கொண்டிருந்ததால் தாங்கள் வாக்குமூலம் அளிக்க முடியாதென்று கூறினர்.
ஆகஸ்ட் 21-இல் பின்னிரவு மணி 2-க்கு உணவருந்த அம்பாங் வாட்டர்பிரண்ட் நோக்கித் தனித்தனி கார்களில் சென்று கொண்டிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்ததாக அவ்விருவரும் தெரிவித்தனர்.
வாக்குமூலங்களில் முரண்
அடையாளம் தெரியாத இரண்டு கார்கள் குறுக்கே வந்து தடுத்ததை அடுத்து தினேஷ் அவரது காரைவிட்டு இறங்கியதைக் கண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இரண்டு கார்கள் தள்ளி நின்ற மோசஸ், ஆயுதம் எதுவும் வைத்திராத தினேஷ், தன் காரை நோக்கித் “திரும்பி ஓடியபோது” சுடப்பட்டார் என்று கூறினார்.தினேஷ் இரண்டுநாள் கழித்து அம்பாங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இளவரசனும்(இடம்) மோசஸும் தினேஷைச் சுட்டவர்கள், அடையாளம் தெரியாத கார்களில் வந்ததாகவும் தாங்கள் யார் என்பதையே காண்பித்துக்கொள்ளவில்லை என்றும் பத்து தடவை தாறுமாறாகச் சுட்டனர் என்றும் கூறினர்.
ஆனால்,போலீசார் வேறு விதமாகக் கூறினர்.தினேஷ் முன்னதாக பாண்டான் பெர்டானாவில் மூண்ட குண்டர்கும்பல் சண்டையைத் தொடர்வதற்காக 14-கார்களுடன் சென்று கொண்டிருந்தாராம்.
தினேஷ் பயணம் செய்த கார் பின்புறமாகச் சென்று போலீஸ் காருடன் மோதியதாகவும் பாராங் ஏந்தியவர்கள் போலீஸ் காரைத் தாக்கத் தொடங்கியதும் தாங்கள் தற்காப்புக்காக இரண்டு தடவை சுட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அச்சம்பவம் தொடர்பில் இளவரசன், மோசஸ், தர்மசேனா ஆகியோர் தனித்தனியே இரண்டு போலீஸ் புகார்களைச் செய்துள்ளனர்.