பாஸ் தலைமையில் கூட்டரசு நில மேம்பாட்டு நிர்வாகக் குடியேற்றக்காரர்களின் உரிமைக்காக போராடும் என்ஜிஓ–வான அனாக்,பெல்டாவின் தலைமை இயக்குனர் (டிஜி) அப்பதவியிலிருந்து தூக்கப்பட்டது பிஎன்னுக்குக் கேடாக அமையும் என்று எச்சரிக்கிறது.
“ஆளும் கூட்டணிக்கு அது நல்லதல்ல…..(டிஜி)சுல்கிப்ளி(வகாப்)க்கு நெருக்கமானவர்களாக 23,000பேர் இருக்கின்றனர்”, என்று அனாக் தலைவர் மஸ்லான் அலிமான் ,மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அவர் குடியேற்றக்காரர்களால் மதிக்கப்படுபவர்.(பெல்டா குடியேற்றக்காரர்கள் வாக்கு வங்கியாகக் கருதப்படுவதால்)அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் அது பிஎன்னுக்கு நல்லதாக இராது”.
பெல்டா தலைவர் முகம்மட் ஈசா சமட் தம் விருப்பம்போல் நடக்க இடமளிப்பது பிஎன்னுக்குக் கெடுதலாகத்தான் அமையும் என்று மஸ்லான் கூறினார்.
பெல்டாவின் இணக்கநிலை கெடாதிருக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலையிட்டு பெல்டாவை நிர்வகிக்கும் பொறுப்பை நிபுணர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முகம்மட் ஈசாவும்(இடம்) அவரின் கையாள்களும் பெல்டாவைச் சொந்த ராஜாங்கம்போல் நினைத்துக்கொண்டு பெல்டா குளோபல் வெண்ட்சர்ச்ஸைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுதல், தங்களைக் குறைசொல்வோரைப் பதவியிலிருந்து தூக்குதல் போன்ற செயல்களைக் கேள்வி கேட்பாறின்றி செய்து வருகின்றனர் என்று அனாக் கூறியது.
முகம்மட் ஈசா தலைவர் பதவியேற்றதும் குறுகியகால கல்வி விடுமுறையில் அனுப்பப்பட்ட சுல்கிப்ளி இப்போது விவசாய, விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சுக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டு அங்கிருந்து ரோம் நகர் அனுப்பப்படுவார் எனத் தெரிகிறது.
அது பற்றிக் கடந்த வாரம் விளக்கமளித்த முகம்மட் ஈசா, இதெல்லாம் பணிமுறையில் வழக்கமாக நடப்பதுதான் என்றும்,அது சுல்கிப்ளியை முடக்கிப்போடும் முயற்சி அல்ல என்றும் கூறினார்.
ஆனால், முகம்மட் ஈசாவின் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினார் என்பதால்தான் சுல்கிப்ளி அங்கிருந்து அகற்றப்படுகிறார் என்று அனாக் கூறியது.அது பற்றிய விவரங்களை அடுத்த வாரம் அம்பலப்படுத்தப்போவதாகவும் அது தெரிவித்தது.