படம் திருத்தப்படவில்லை என்கிறார் பெர்னாமா தலைமை ஆசிரியர்

புத்ராஜெயாவில் பிரதமர் நடத்திய 2012ம் ஆண்டு நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பின் போது எடுக்கப்பட்ட படத்தை பெர்னாமா ‘திருத்தியது’ என சில தரப்புக்கள் சொல்வது முழுக்க முழுக்க அபத்தமானது என அதன் தலைமை ஆசிரியர் யோங் சூ ஹியோங் கூறுகிறார்.

“பெர்னாமாவைப் போன்ற பொறுப்புள்ள தொழில் நிபுணத்துவம் உள்ள செய்தி நிறுவனத்துக்கு நேரம் மிகவும் முக்கியமானதாகும். நேர்மையற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு எங்களுக்கு நேரமில்லை,” என அவர் சொன்னார்.

இவ்வாண்டு அந்த செய்தி நிறுவனத்தின் படப் பிடிப்புப் பிரிவுக்கு நவீன கேமிராக்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் யோங் தெரிவித்தார்.

பிரதமருடைய திறந்த இல்ல உபசரிப்பில் பெருந்திரளான மக்கள் மிக்க ஆர்வத்துடன் இருப்பதைக் காட்டும் -கேள்வி  எழுப்பப்பட்டுள்ள அந்த படத்தின் அசலை யார் வேண்டுமானாலும் கோலாலம்பூரில் உள்ள பெர்னாமா தலைமையகத்தில் பார்க்கலாம் என்றார் அவர்.

மூன்று தசாப்தங்களுக்கு முன்பு டாக்டர் மகாதீர் முகமட் காலம் தொட்டு பழைய ஸ்ரீ பெர்டானா டமன்சாராவிலும் நடப்பு ஸ்ரீ பெர்டானா புத்ராஜெயாவிலும் நிகழும் பிரதமர்களது நோன்புப் பெருநாள் திறந்த இல்லை உபசரிப்புக்களில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்வது வழக்கம் என்றார் அவர்.

பல நாளேடுகளில் வெளியான அந்தப் படத்தை வரைபடக் கலைஞர் ஒருவர் இளைஞர்களும் வயதானவர்களும் சக்கர நாற்காலிகளில் உடற்குறையுடையவர்களும் காணப்படும் வகையில் திருத்தியுள்ளதாக செப்டம்பர் முதல் தேதி எதிர்க்கட்சி  செனட்டர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.

ஹாரி சல்ஸாமான் அபு பாக்கார் என்ற அந்த பெர்னாமா படப் பிடிப்பாளர் ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமருன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரை எந்த விதமான பிரச்னையும் இல்லாமல்  படம் பிடித்துள்ளார் என்றும் யோங் தெரிவித்தார்.

அவர் தமது படைப்பாற்றலைப் பயன்படுத்தி பிரதமரைச் சந்திக்க வந்த பெரும் திரளான மக்களைக் குறிப்பாக இளைஞர்களை படம் பிடித்துள்ளார்.

அந்தப் படத்துடன் மக்களுடைய ஆர்வத்தை காட்டும் மற்ற படங்களையும் அந்த நிகழ்வில் எடுத்துள்ளார். அங்கு கூடியிருந்த மக்களுக்கு பிரதமர் கைகளை அசைத்துக் காட்டும் படமும் அதில் அடங்கும்.

“டத்தோ ஸ்ரீ நஜிப் தமது சொந்த நோன்புப் பெருநாள் திறந்த உபசரிப்பில் மட்டுமல்லாது எல்லா பொது நிகழ்வுகளிலும் கூட்டத்தினரைக் கவரும் ஆற்றலைக் கொண்டவர். அதனை மற்ற செய்தி நிறுவனங்கள் எடுத்துள்ள படங்கள், வீடியோ பதிவுகள் வழியாகவும் காண முடியும்,” என்றார் யோங்.