கனடிய எழுத்தாளரான இர்ஷாட் மாஞ்சியின் Allah, Liberty and Love என்னும் புத்தகத்தின் மீது பாட்வா (சமய ஆணை) ஏதும் வெளியிடப்படாத போதும் பார்டர்ஸ் நிறுவனத்துக்கும் அதன் கடை நிர்வாகி நிக் ராய்னா நிக் அப்துல் அஜிஸுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்ததை ஜாவி எனப்படும் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரத் துறை ஒப்புக் கொண்டுள்ளது.
பார்டர்ஸ் புத்தகக் கடைகளை நடத்தி வரும் Berjaya Books Sdn Bhd வழக்குரைஞர் ரோஸ்லி டாஹ்லான் , நிக் ராய்னா, Berjaya Booksன் துணை தலைமை நிர்வாகி (நடவடிக்கை, வாணிகம்) ஸ்டீபன் பூங் ஆகியோருக்கு ஜாவி அனுப்பியுள்ள அபிடவிட்டில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இன்று நீதிபதி ரோஹானா யூசோப் முன்னிலையில் அந்த வழக்கு நீதித் துறை மறு ஆய்வுக்கு வந்த பின்னர் ரோஸ்லி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்துக்கு வெளியில் அந்தத் தகவலை வெளியிட்டார்.
எனினும் உள்துறை அமைச்சர், பிரதமர் துறை அமைச்சர், ஜாவி ஆகிய தரப்புக்களுக்கு ஆஜரான முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர், உள்துறை அமைச்சருடைய அபிடவிட்டைச் சமர்பிப்பதற்கு கூடுதல் அவகாசம் கோரினார்.
தாங்கள் ஜுன் மாதமே அபிடவட்டையும் மற்ற தேவையான ஆவணங்களையும் சமர்பித்து விட்டதாகவும் அதற்கு அடுத்த 14 நாட்களுக்குள் வாதிகள் தங்கள் ஆவணங்களைக் கொடுத்திருக்க வேண்டும் என்றார் ரோஸ்லி.
“இப்போது அவர்கள் உள்துறை அமைச்சருடைய அபிடவிட்டைச் சமர்பிக்க கால நீட்டிப்புக் கேட்டுள்ளனர்,” என்றும் அவர் சொன்னார்.
“அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த வழக்கு அக்டோபர் 4ம் தேதி வழக்கு நிர்வாகத்துக்கு
வருமென நீதிமன்றம் தேதியை நிர்ணயம் செய்தது. அத்துடன் நீதிபதி ரோஹானா முன்னிலையில் அக்டோபர் 22ம் தேதி விசாரணை தொடங்கும்.
அதனை முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் எபெண்டி நாஸில்லா டாவுட் உறுதிப்படுத்தியதுடன் அமைச்சர் அபிடவிட்டை சமர்பிக்க தங்களுக்குக் கூடுதல் அவகாசம் தேவை என்பதையும் ஒப்புக் கொண்டார்.