மெர்தேக்கா சர்ச்சைக்குரிய சம்பவம் : 19 வயது பெண் போலீசாரிடம் சரண்

கோலாலம்பூரில் மெர்தேக்காவுக்கு முந்திய நாளன்று நிகழ்ந்த ஜாஞ்சி டெமாக்கரசி பேரணியின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பில் ஜோகூர் பாருவைச் சேர்ந்த 19 வயது பெண் போலீசாரிடம் சரணடைந்தார்.

வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக போலீசார் தேடி வந்த 11 பேரில் அவரும் ஒருவர் ஆவார்.

பாக்ரி எம்பி எர் தெக் ஹுவா, மாநில டிஏபி துணைத் தலைவர் நோர்மன் பெர்னாண்டெஸ் உட்பட ஜோகூர் டிஏபி தலைவர்கள் இன்று காலை வருடன் ஜோகூர் பாரு மத்தியப் போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர்.

இளம் வயதினர் என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. அவர் பின்னர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு போடப்பட்டது.

அந்தச் சம்பவங்களை விசாரிக்கும் கோலாலம்பூர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்துக்கு அவர் கொண்டு செல்லப்படுவார்.

1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தின் 4(1) பிரிவின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞருமான பெர்னாண்டெஸ் கூறினார்.

அவர் அந்தப் பேரணியின் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது துணைவி ஆகியோரது படங்களை மிதித்ததாகவும் கூறப்பட்டது.

மெர்தேக்காவுக்கு முந்திய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தாம் நண்பர்களுடன் டாத்தாரான் மெர்தேக்காவுக்குச் சென்றதாக அவர் போலீசாரிடம் விளக்கியதாகவும் பெர்னாண்டெஸ் சொன்னார்.

அவர் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல.

“நஜிப் பெரிய மனதுடன் அந்தச் சம்பவத்தை மறந்து மன்னித்து விட வேண்டும் என அவர் அதற்கு முன்பு கேட்டுக் கொண்டார்.

“கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் படத்தின் மீது சிறு நீர் கழித்தது, மாலை போடப்பட்ட பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் படத்தைத் தொங்க விட்டது, பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா படத்துக்கு எரியூட்டியது போன்ற அதை விட கடுமையான சம்பவங்கள் நிகழ்ந்துள்ள போது போலீசார் ஏன் அவர் மீது குற்றம் சாட்ட வேண்டும் ?”

பல்வேறு சம்பவங்களில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் 11 பேரின் படங்களை போலீஸ் வெளியிட்டுள்ளது.  Sang Saka Malaya என்னும் கொடியை பறக்க விட்டதும் அவற்றுள் அடங்கும்.

விசாரணைகளுக்கு உதவ அவர்கள் முன் வரா விட்டால் கைது ஆணை பிறப்பிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

TAGS: