அஜிஸான் வேலைக்குத் திரும்பினார், ஆட்சி மன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்

கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்தப் பதவிக்கு புதியவர் நியமிக்கப்படுவார் என்ற ஆரூடங்களுக்கு இடையில் அவர் நேற்று மீண்டும் தமது பணிகளைத் தொடர்ந்தார்.

அவர் நேற்று வழக்கம் போல மாநில ஆட்சிமன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதாக அவரது அரசியல் செயலாளர் முகமட் சனுசி முகமட் நோர் கூறினார்.

“மந்திரி புசார் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அவர் பணியாற்றுவதற்கு ஆரோக்கியமாக இருக்கிறார்,” என மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் முகமட் சனுசி சொன்னார்.

வேலைச் சுமையால் களைப்படைந்ததாலும் நோய் வாய்ப்பட்டதாலும் அஜிஸான் ஆகஸ்ட் 25ம் தேதி கெடா மருத்துவ மய்யத்தில் சேர்க்கப்பட்டார்.

இருதய, சிறுநீரக நோய்களினால் அவர் சிரமப்படுவதாக நம்பப்படுகின்றது. அத்துடன் அவருக்கு ரத்த அழுத்தமும் நீரிழிவு நோயும் உள்ளது.

அவருடைய உடல் நிலை காரணமாகவும் கட்சித் தலைமைத்துவத்துடன் அவர் ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுவதாலும் அவர் மாற்றப்படலாம் என நீண்ட காலமாக வதந்திகள் பரவி வருகின்றன.

 

TAGS: