குடியுரிமை மனுமீதான அமைச்சின் உத்தரவை ரத்துச் செய்தது உயர் நீதிமன்றம்

முன்னாள் போலீஸ்காரர் (வயது 82) ஒருவர் தம் இரு பிள்ளைகளுக்குக் குடியுரிமைக்காக செய்த விண்ணப்பத்தை நிராகரிக்கும் உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் உத்தரவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று ரத்துச் செய்தது.

எம்.இராமனுஜத்தின் விண்ணப்பம், அவரின் பிள்ளைகள் ஆர்.திருப்பதி, ஆர்.மீனா ஆகிய இருவரும் ஏற்கனவே இந்திய குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் தலைமைச் செயலாளரால் நிராகரிக்கப்பட்டது.

ஆனால் அவரின் உத்தரவை நீதிபதி ரொஹானா யூசுப் இன்று ரத்துச் செய்தார்.

ஆனால், உத்தரவை ரத்துச் செய்த நீதிபதி, தம் பிள்ளைகளுக்குக் குடியுரிமை வழங்க தேசியப் பதிவுத்துறை (என்ஆர்டி) க்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று இராமனுஜம் செய்திருந்த மனுவை ஏற்கவில்லை. எனவே, இராமனுஜம் மீண்டும் தம் பிள்ளைகளின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

போலீசிலிருந்து பணி ஓய்வுபெற்ற இராமனுஜம் கடைசிகாலத்தில் தம் பிள்ளைகள் உடனிருப்பதை விரும்பியதால் அவர்களின் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

அவரும் அவரின் மனைவியும் மலேசியக் குடிமக்கள். ஆனால், திருப்பதியும் மீனாவும் பிறந்தது இந்தியாவில்.

நீதிமன்றத் தீர்ப்பு 80 விழுக்காடு இராமனுஜத்துக்கு வெற்றி என அவரின் வழக்குரைஞர் எம்.மனோகரன் வருணித்தார். என்ஆர்டி அவரின் பிள்ளைகளுக்குக் குடியுரிமை வழங்கி அவர்கள் கடைசிகாலத்தில் இராமனுஜத்தை பார்த்துக்கொள்வதற்கு வசதி செய்துகொடுக்க வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சு, அவ்விருவரும் இந்திய குடிமக்கள் என்பதால் அவர்களின் விண்ணப்பத்தைப் பரிசீலிக்க இயலாது என கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.

அது ஒரு பிரச்னை அல்ல என்ற மனோகரன். மலேசியக் குடியுரிமை கிடைத்ததும் இந்திய குடியுரிமையைக் கைவிட அவர்கள் தயாராகவுள்ளனர் என்றார்.

மலேசியர்கள் இரட்டைக் குடியுரிமை வைத்திருக்க முடியாது.

தம் பிள்ளைகளின் விண்ணப்பத்தை விரைவுபடுத்த உதவுமாறு இராமனுஜம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் எழுதிக் கேட்டிருந்தார். நஜிப்பின் உதவியாளர் அதை உள்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்க அதன் தலைமைச் செயலாளர் அவர்கள் இந்திய குடிமக்கள் என்று கூறி அவற்றை நிராகரித்தார்.